ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 4 (ஞான யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 3

கீதார்த்த ஸங்க்ரஹம் எட்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் நான்காம் அத்யாயத்தின் கருத்தை “ஞான யோகத்தை உள்ளடக்கிய கர்ம யோகம் என்பது ஞான யோகமே என்றும் , கர்ம யோகத்தின் தன்மை மற்றும் உட்பிரிவுகள், உண்மையான அறிவின் மகத்துவம் மற்றும் (ஆரம்பத்தில், எம்பெருமானின் வார்த்தைகளின் நம்பகத்தன்மையை நிறுவ) தற்செயலாக விளக்கப்பட்டுள்ள அவனுடைய அவதார நிலையிலும் மாறாத குணங்களைப் பற்றிய சொற்பொழிவு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச ।
இமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ।
விவஸ்வாந்
வே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே(அ)ப்³ரவீத் ॥

க்ருஷ்ணன் சொன்னான் – இந்த அழியாத கர்ம யோகத்தை நான் ஸூர்யனுக்குக் கற்றுக் கொடுத்தேன். ஸூர்யன் இதை மனுவுக்குக் கற்றுக் கொடுத்தான். மனு இக்ஷ்வாகுவுக்கு இதைக் கற்பித்தான்.

குறிப்பு: க்ருஷ்ணன் தனது புராதனத் தன்மையையும், தனது உபதேசங்களின் நம்பகத்தன்மையையும் முதல் மூன்று ச்லோகங்களில் நிறுவுகிறான். தான் கொடுத்த அறிவு காலப்போக்கில் தொலைந்து போனதையும் விளக்குகிறான். நான்காவது ச்லோகத்தில், அர்ஜுனன், க்ருஷ்ணனை “இப்போது இருக்கும் நீ, இந்த அறிவை வெகு காலத்திற்கு முன்பே எப்படிக் கற்பித்திருக்க முடியும்” என்று கேட்கிறான். அதற்கு, க்ருஷ்ணன் தனது அவதாரங்களைப் பற்றிய ரஹஸ்யத்தை அடுத்த நான்கு ச்லோகங்களில் விளக்குகிறான்.

ச்லோகம் 5

ஶ்ரீப⁴க³வானுவாச ।
ப³ஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜு
தாந்யஹம் வேத³ ஸர்வாணி ந த்வம் வேத்த² பரந்தப॥

க்ருஷ்ணன் சொன்னான் “அர்ஜுனா! உன்னைப்போல் எனக்கும் எண்ணற்ற பிறவிகள் கடந்துவிட்டன. எதிரிகளைத் துன்புறுத்துபவனே! (என்னுடைய மற்றும் உன்னுடைய) அந்த பிறப்புகள் அனைத்தையும் நான் அறிவேன், அவற்றை நீ அறியமாட்டாய்”.

குறிப்பு: பகவான் தனது உயர்த்தியையும் அர்ஜுனனின் தாழ்ச்சியையும் விளக்குகிறான்.

ச்லோகம் 6

அஜோ(அ)பிஸந் வ்யயாத்மா பூ⁴தாநாமீஶ்வரோ(அ)பிஸன் ।
ப்ரக்ருʼதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ॥

பிறப்பற்றவனாகவும், அழியாதவனாகவும், எல்லா உயிர்களுக்கும் ஈச்வரனாகவும் இருப்பதால், நான் எனது விருப்பத்தால் தனித்துவம் வாய்ந்த திவ்ய திருமேனியை ஏற்றுக்கொண்டு பல பிறவிகளில் பிறக்கிறேன்.

குறிப்பு: பகவான் இவ்வுலகில் அவதரிக்கும் போது, அது அவனது விருப்பத்தின் காரணமாக, தனது திவ்ய திருமேனியுடன் அவதரிக்கிறான்.

ச்லோகம் 7

யதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர் ப⁴வதி பா⁴ரத ।
அப்⁴யுத்தா²மத⁴ர்மஸ்ய ததா³த்மாம் ஸ்ருஜாம்யஹம் ॥

பரத குலத்தில் வந்தவனே! எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து, அதர்மம் பெருகுகிறதோ, அந்த ஸமயங்களில் நான் என்னையே படைக்கிறேன் [பல்வேறு அவதாரங்களில் என்னை வெளிப்படுத்துகிறேன்].

குறிப்பு: பகவான் தன் விருப்பப்படி எப்போது அவச்யம் என்று நினைக்கிறானோ அப்போது அவதாரம் செய்கிறான்

ச்லோகம் 8

பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஶாய ச து³ஷ்க்ருʼதாம் ।
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்த்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ॥

நான் ஒவ்வொரு யுகத்திலும் நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீயவரை அழிக்கவும், தர்மத்தை உறுதியாக நிலைநிறுத்தவும் பல விதமாகப் பிறக்கிறேன்.

குறிப்பு: பகவானின் அவதாரத்திற்கு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவனுடைய திவ்ய திருமேனியை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லவர்களைப் பாதுகாப்பதே முக்கிய குறிக்கோளாகக் கருதப்படுகிறது, ஏனெனில் மற்ற இரண்டு விஷயங்களையும் அவன் அவதாரம் செய்யாமல், அவனது ஸங்கல்பத்தின் மூலமே நிறைவேற்ற முடியும்.

ச்லோகம் 9

ஜன்ம கர்ம ச மே தி³வ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத꞉ ।
த்யக்த்வா தே³ஹம்ʼ புர் ஜந்ம நைதி மாமேதி ஸோ(அ)ர்ஜு

அர்ஜுனா! எவன் எனது திவ்ய அவதாரங்கள் மற்றும் லீலைகளை முன்பு விளக்கியது போல் (உண்மையாக) த்யானம் செய்கிறானோ, அவன் தற்போதைய உடலை விட்ட பிறகு, மீண்டும் இங்கே பிறப்பதில்லை. என்னையே அடைகிறான்.

குறிப்பு: பகவானின் அவதாரங்கள் மற்றும் லீலைகள் பற்றிய உண்மையான அறிவு பகவானை அடைவதற்கான ஒரு வழியாகும்.

ச்லோகம் 11

யே யதா² மாம் ப்ரபத்³யந்தே தாம்ஸ்ததை²வ ப⁴ஜாம்யஹம் ।
மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா꞉ பார்த்த² ஸர்வஶ꞉ ॥

என்னிடம் சரணடைபவர்களை, எந்த வழியில் அவர்கள் என்னை அடைய விரும்புகிறார்களோ, அவர்கள் விரும்பிய அதே வழியில் நான் அடைகிறேன். பார்த்தா! எல்லா மக்களும் எல்லா வகையிலும் என் குணங்களை அனுபவித்தே வாழ்கிறார்கள்.

குறிப்பு: பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப ப்ரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சா விக்ரஹங்கள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன. அடுத்த ச்லோகத்தில், தனது அவதாரங்களைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றவர்கள் எப்படி முக்தி அடைவார்கள் என்பதை பகவான் விளக்குகிறான்.

அடுத்த ஆறு ச்லோகங்களில், அவன் ஞானத்தை உள்ளடக்கிய கர்ம யோகம் பற்றிய அறிமுகத்தைத் தருகிறான்.

ச்லோகம் 13

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருʼஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஶ꞉ ।
தஸ்ய கர்த்தாரமபி மாம்ʼ வித்³த்⁴யகர்த்தாரமவ்யயம் ॥

நான்கு வர்ணங்களால் நடத்தப்படும் அனைத்து உலகங்களும் ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களின் வகைப்பாட்டின் அடிப்படையிலும், சமம் (மனதை அடக்குவது, தமம் (இந்த்ரியங்களை அடக்குவது) போன்ற கர்மத்தின் விதங்களின் அடிப்படையிலும் ஸர்வேச்வரனான என்னால் உருவாக்கப்பட்டன. இந்த அற்புதமான படைப்புக்கு நான் படைப்பாளியாக இருந்தாலும், இவற்றின் உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு நான் படைப்பாளி அல்ல என்றும், அதன் காரணமாக, குற்றமற்றவன் என்றும் அறிவாயாக.

குறிப்பு: இந்த ச்லோகத்தின் சூழல் வர்ணப் பிரிவை விளக்குவது அல்ல, மாறாக பகவான் பலவிதமான ஸ்ருஷ்டிகளால் பாதிக்கப்படவில்லை என்பதை நிறுவுவதாகும். வர்ணம் என்பது உடலுக்கு மட்டுமே அன்றி ஆன்மாவுக்கானது அல்ல என்பதால், நமது ஆசார்யர்கள் வர்ணத்தை மாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக, அவர்கள் பகவான் மீது உண்மையான பக்தியை வளர்த்து, அவருக்கு நித்ய கைங்கர்யம் செய்வதில் கவனம் செலுத்தினர்.

அடுத்த சில ச்லோகங்களில், கர்ம யோகம் எப்படி ஞான யோகத்தின் ஒரு நிலை என்பதை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 22

யத்³ருச்சா²லாப⁴ஸந்துஷ்டோ த்³வந்த்³வாதீதோ விமத்ஸர꞉ ।
ஸம꞉ ஸித்³தா⁴வஸித்³தௌ⁴ ச க்ருத்வா(அ)பி ந நிப³த்⁴யதே ॥

ஒருவன் தனக்குக் கிடைப்பதைக் கொண்டு த்ருப்தியாய் இருந்துகொண்டு, தனக்கு ஏற்படும் இரட்டைகளை (ஸுகம்-துக்கம், உஷ்ணம்-குளிர்ச்சி) பொறுத்துக் கொண்டு, மற்றவர்களிடம் பொறாமை இல்லாமல், வெற்றி தோல்விகளில் ஸமமாக இருந்தால், ஞானம் இல்லாமல் கூட கர்மங்களைச் செய்துகொண்டிருந்தாலும், அவன் ஸம்ஸாரத்தில் பந்தப்பட மாட்டான்.

அடுத்த ச்லோகத்தில், யாகம் போன்ற கர்மங்களை எந்தப் பற்றுதலும் இல்லாமல் செய்பவனுக்கு அவனுடைய புண்ணியம்/பாபம் ஆகியவை முற்றிலும் அழிந்துவிடும் என்று விளக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ச்லோகங்களில், கர்ம யோகத்தின் வகைகள் மற்றும் கர்ம யோகத்தின் ஒரு பகுதியான ஞானத்தின் மகத்துவம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

ச்லோகம் 34

தத்³வித்³தி⁴ ப்ரணிபாதேந பரிப்ரஶ்னேந ஸேவயா ।
உபதே³க்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ் தத்வ த³ர்ஶிந꞉ ॥

ஞானிகளிடத்தில் இருந்து அந்த உயர்ந்த ஞானத்தை அவர்களை முறையாக வணங்கி, அவர்களிடத்தில் சரியான கேள்விகளை பணிவோடு கேட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து, பெற்றுக் கொள்ளவும். ஆத்ம ஞானத்தைப் பெற்ற அந்த ஞானிகள் அதை உனக்கு உபதேசிப்பார்கள்.

குறிப்பு: ஒரு உண்மையான குருவிடம் பணிவுடன் கற்பதன் முக்கியத்துவம் இங்கே வலியுறுத்தப்படுகிறது.

ச்லோகம் 38

ந ஹி ஜ்ஞானேந ஸத்³ருʼஶம் பவித்ரமிஹ வித்³யதே ।
தத் ஸ்வயம் யோக³ஸம்ஸித்³த⁴꞉ காலேநாத்மனி விந்த³தி ॥

இவ்வுலகில் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் போல் தூய்மைப்படுத்துவது எதுவுமில்லை. (முன்பே காட்டப்பட்ட) கர்ம யோகத்தில் இத்தகைய பரிபூரண அறிவைப் பெற்ற ஒருவன், காலப்போக்கில் ஆத்ம ஞானத்தை உணர்கிறான்.

ச்லோகம் 42

தஸ்மாத³ஜ்ஞானஸம்பூ⁴தம் ஹ்ருʼத்ஸ்த²ம் ஜ்ஞானாஸிநாத்மந꞉ ।
சி²த்வைநம் ஸம்ஶயம் யோக³மாதிஷ்டோ²த்திஷ்ட² பா⁴ரத ॥

பரத குலத்தில் வந்தவனே! முன்பு விளக்கப்பட்ட கர்ம யோகத்தால் [ஞானம் இல்லாமல் வெறும் கர்மத்தில் ஈடுபடுவதால்] மோக்ஷத்தை அடைய முடியாது என்பதால், இந்த ஆத்ம ஸம்பந்தமான விஷயங்களில் உள்ள ஸந்தேஹங்களை அறிவென்னும் வாளால் வெட்டி, விழித்தெழுந்து கர்ம யோகத்தில் ஈடுபடுவாயாக..

குறிப்பு: ஆக, கர்ம யோகத்தின் முக்கிய அங்கமான ஞானத்தின் மகத்துவம் இங்கு விளக்கப்பட்டது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org