ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 3 (கர்ம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 2

கீதார்த்த ஸங்க்ரஹம் ஏழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை “(ஞான யோகத்தில் ஈடுபடும் தகுதி இல்லாதவர்களான) மக்களைப் பாதுகாக்க, ஸத்வம் ரஜஸ் தமோ குணங்களில் தனக்கு இருக்கும் கர்த்ருத்வத்தை த்யானித்து, ஸர்வேச்வரனிடத்தில் அந்தக் கர்த்ருத்வத்தை ஸமர்ப்பித்து, மோக்ஷம் தவிர மற்ற பலன்களில் ஆசையில்லாமல், விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மூன்றாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச ।
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜனார்த³ன ।
தத்கிம்ʼ கர்மணி கோ⁴ரே மாம்ʼ நியோஜயஸி கேஶவ ॥

ஓ ஜனார்தனா! ஓ கேசவா! போர் முதலான கொடூரமான செயல்களுடன் ஒப்பிடுகையில் அறிவில் நிலைத்திருப்பது சிறந்தது என்பது உன்னுடைய வலுவான கருத்தாக இருந்தால், ஏன் என்னை இப்படிப் போரில் ஈடுபடுத்துகிறாய்? (என்கிறான் அர்ஜுனன்).

குறிப்பு: முதல் இரண்டு ச்லோகங்களில், அர்ஜுனன் தனக்கு கர்ம யோகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போரில் தன்னை க்ருஷ்ணன் ஈடுபடுத்துவது பற்றிக் கேள்வி எழுப்புகிறான், அதே சமயம் ஞான யோகம் சில சமயங்களில் சிறந்ததாகக் கருதப்படலாம்.

ச்லோகம் 3

ஶ்ரீப⁴க³வானுவாச ।
லோகே(அ)ஸ்மின் த்³விவிதா⁴ நிஷ்டா² புரா ப்ரோக்தா மயானக⁴ ।
ஜ்ஞானயோகே³ன ஸாங்க்²யானாம்ʼ கர்மயோகே³ன யோகி³னாம் ॥

பாவமில்லாதவனே! வெவ்வேறு விதமான மக்களால் நிரம்பிய இவ்வுலகில், இரண்டு வகையான நிலைகள் (இருப்பது) முந்தைய அத்தியாயத்தில் நான் (மிகக் கருணையுள்ளவன், கொள்கைகளை அப்படியே விளக்குவது) நேர்த்தியாக விளக்கியுள்ளேன்; (அவை) நல்ல ஞானம் உள்ளவர்களுக்காக ஞான யோக நிலை (உலக இன்பங்களால் ஈர்க்கப்படாமல் ஆத்மாவில் நிலைத்து நிற்பது) மற்றும் கர்ம யோகத்திற்கு தகுதியானவர்களுக்கு (ஞானத்துடன் உலக இன்பங்களில் ஆர்வம் கொண்டவர்) கர்ம யோக நிலை. .

குறிப்பு: “தனிநபர்களின் தகுதியின் அடிப்படையில் நான் இரு நிலைகளையும் வகைப்படுத்தியுள்ளதால், எனது வார்த்தைகளில் எந்த முரண்பாடும் இல்லை” என்று க்ருஷ்ணன் கூறுவதாக உணர்த்தப்படுகிறது.

ச்லோகம் 4

ந கர்மணாமனாரம்பா⁴ந்நைஷ்கர்ம்யம்ʼ புருஷோ(அ)ஶ்னுதே ।
ந ச ஸந்ந்யஸநாதே³வ ஸித்³தி⁴ம்ʼ ஸமதி⁴க³ச்ச²தி ॥

(இவ்வுலகில் வாழும்) எந்த ஒரு மனிதனும் கர்ம யோகத்தில் ஈடுபடத் தொடங்காமல் ஞான யோகத்தை அடைய மாட்டான்; அல்லது கர்ம யோகத்தின் பலனாக ஏற்படும் ஞான யோகத்தை, அந்தக் கர்ம யோகத்தைக் கைவிடுவதன் மூலம் அடைய மாட்டான்.

குறிப்பு: எவனுடைய மனம் கலங்கியிருக்கிறதோ, அவன் பகவானுக்கு ஆராதனமான கர்ம யோகத்தைச் செய்த பிறகே மனக் குழப்பங்கள் நீங்கி, உண்மையான அறிவில் நிலைபெறுவான் என்பது சொல்லப்படுகிறது.

ச்லோகம் 6

கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் ।
இந்த்³ரியார்த்தா²ன் விமூடா⁴த்மா மித்²யாசார꞉ஸ உச்யதே ॥

ஞான யோகத்தில் நோக்காயிருப்பவன் தன்னுடைய வாய், வாக்கு, கைகள், கால்கள் முதலிய இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்தியும், ஆத்ம விஷயத்தில் ஞானம் இல்லாமலும் இருந்த மனதைக் கொண்டு இந்த்ரியங்களுக்கு இரையான விஷயங்களை நினைத்துக் கொண்டிருந்தால், அவனுடைய ஒழுக்கம் குறையுடையது.

குறிப்பு: இந்த ச்லோகம் தொடங்கி, க்ருஷ்ணன் ஞான யோகத்துக்கு மேலே கர்ம யோகத்துக்கு உள்ள பெருமையைக் காட்டுகிறான்.

ச்லோகம் 9

யஜ்ஞார்த்தா²த் கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்மப³ந்த⁴ன꞉ ।
தத³ர்த்த²ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க³꞉ ஸமாசர ॥

யாகத்துக்காகச் செய்ய வேண்டிய செயல்களைத் தவிர மற்ற செயல்களில் ஈடுபடும்போது மட்டுமே, இந்த உலகம் கர்மத்தால் கட்டுப்படும். (ஆகையால்) ஓ அர்ஜுனா! யாகத்தின் அங்கமான பற்றற்ற கர்மங்களை (செயல்களை) நீ செய்.

10வது ச்லோகத்தில் இருந்து, கண்ணன், ஸ்ருஷ்டிகர்த்தாவான பரமாத்மாவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டுகிறான். இதில் பகவானை வழிபடும் முறையான கர்ம யோகத்தின் ஒரு பகுதியான யாகங்களைச் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறான்.

ச்லோகம் 13

யஜ்ஞஶிஷ்டாஶின꞉ ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி³ஷை꞉ ।
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ॥

பகவானை வழிபடுவதன் ஒரு அங்கமான யாகத்தில் ஸமர்ப்பித்த மிச்சங்களை உண்ணும் நல்லவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள்; தங்கள் பசிக்காக மட்டும் சமைத்து உண்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

17வது ச்லோகத்திலிருந்து, ஒரு சில ச்லோகங்களில், அர்ஜுனன் ஆத்ம உணர்வை அடைய கர்ம யோகத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று க்ருஷ்ணன் வலியுறுத்துகிறான்.

20வது ச்லோகத்தில், ஜனக மஹாராஜர் எப்படிக் கர்ம யோகத்தின் மூலம் மோக்ஷத்தை அடைந்தார் என்பதை க்ருஷ்ணன் விளக்குகிறான்

ச்லோகம் 21

யத்³யதா³சரதி ஶ்ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜன꞉ ।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³னுவர்ததே ॥

நல்ல ஞானம் மற்றும் அனுட்டானம் உள்ளவர்கள் எந்தச் செயல்களைச் செய்கிறார்களோ, அதே செயல்களை சாதாரண மக்கள் செய்கிறார்கள். அந்த அதிகாரிகள் எந்த முறையில் அந்தச் செயல்களைச் செய்கிறார்களோ, அதையே உலகப் பொது மக்களும் பின்பற்றுகிறார்கள்.

அடுத்த இரண்டு ச்லோகங்களில், க்ருஷ்ணன் தான் சாஸ்த்ரத்துக்கு கட்டுப்படாத நிலையிலும் கர்மங்களை ஏன் செய்கிறான் என்பதை விளக்குகிறான்.

ச்லோகம் 27

ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி கு³ணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ ।
அஹங்காரவிமூடா⁴த்மா கர்தாஹமிதி மன்யதே ॥

அஹங்காரத்தால் (உடலை ஆன்மாவாகக் கருதுதல்), ப்ரக்ருதியின் மூவகைக் குணங்களின் மூலம் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) பல விதமாக செய்யப்படும் கர்மங்களில் ஆத்மா “நானே செய்பவன்” என்று கலங்குகிறான்.

ச்லோகம் 30

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்⁴யாத்மசேதஸா ।
நிராஶீர்நிர்மமோ பூ⁴த்வா யுத்⁴யஸ்வ விக³தஜ்வர꞉ ॥

ஆத்மாவைப் பற்றிய அறிவோடு, எல்லா கர்மங்களையும் அனைத்திற்கும் அந்தர்யாமியாகிய என் விஷயத்தில் ஸமர்ப்பித்து, கர்ம பலன்களில் ஆசை வைக்காமல், “இது என் செயல்” என்று நினைக்காமல், அநாதி காலமாக சேர்த்த பாபங்களைப் பற்றி கவலைப்படாமல், யுத்தத்தைப் பண்ணுவாயாக.

இறுதியில் உள்ள ச்லோகங்களில், ஞான யோகம் செய்வது கடினம் என்றும் அதைச் செய்யும்போது தவறு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் க்ருஷ்ணன் விளக்குகிறான்.

ச்லோகம் 35

ஶ்ரேயான்ஸ்வத⁴ர்மோ விகு³ண꞉ பரத⁴ர்மாத்ஸ்வனுஷ்டி²தாத் ।
ஸ்வத⁴ர்மே நித⁴னம் ஶ்ரேய꞉ பரத⁴ர்மோ ப⁴யாவஹ꞉ ॥

(உடம்போடே கூடியிருக்கும் ஆத்மாவுக்கு) இயற்கையில் பொருந்தியிருக்கும் உபாயமான கர்மயோகம் குறைகளோடே செய்யப்பட்டாலும், (இதுவரை பழகாததால்) மற்றவர்களுக்கு உபாயமாக இருக்கும், குறையில்லாமல் செய்யப்படும் ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது. தனக்குரிய உபாயத்தைச் செய்து (அந்தப் பிறவியில்) பலனடையாமல் மரணம்டைந்தாலும் சிறந்தது. மற்றவர்களுக்குரிய ஞான யோகம் தவறுகள் ஏற்படுவதற்கு இடமுடையதாக இருப்பதால், அது பயத்தை அளிக்கக்கூடியது.

குறிப்பு: இங்கே, சிலர் ஸ்வதர்மத்தை ஒருவரின் வர்ணாச்ரமத்தின் அடிப்படையில் செய்யப்படும் தார்மிகமான செயல்கள் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இந்த ச்லோகம் அர்ஜுனனுக்கான கர்ம யோகமா இல்லை ஞான யோகமா என்கிற குழப்பத்தின் விடையில் ஒரு பகுதியாக விளக்கப்பட்டிருப்பதால், அர்ஜுனனைப் போன்ற ஒருவருக்கு இயற்கையான கர்ம யோகத்தைப் பின்பற்றுவது சிறந்தது என்று க்ருஷ்ணன் தெளிவுபடுத்துகிறான்.

ச்லோகம் 43

ஏவம்ʼ பு³த்³தே⁴꞉ பரம் பு³த்³த்⁴வா ஸம்ஸ்தப்⁴யாத்மானமாத்மனா ।
ஜஹி ஶத்ரும் மஹாபா³ஹோ காமரூபம் து³ராஸத³ம் ॥

வலிமைமிக்க தோள்களையுடையவனே! இவ்வாறே (ஆத்ம ஞானத்தைத் தடுப்பதில்) புத்தியை விட சக்திவாய்ந்த காமத்தைப் பற்றி அறிந்து, உறுதியான அறிவின் மூலம் உன் மனதை ஆணையிட்டு, காமம் என்கிற வெல்ல முடியாத எதிரியை அழிப்பாயாக.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org