ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

ஆளவந்தார் தம்முடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஐந்தாம் ச்லோகத்தில் முதல் அத்யாயத்தின் கருத்தை “தகாத உறவினர்களிடத்தில் பாசத்தினாலும் கருணையினாலும் செய்ய வேண்டிய தர்மமான யுத்தத்தில் செய்யக்கூடாது என்கிற அதர்மபுத்தியைப் பெற்று, அதனால் அர்ஜுனன் கலங்கி நின்றான். அவனை யுத்தம் செய்ய வைப்பதற்காக இந்த கீதா சாஸ்த்ரம் எம்பெருமானாலே தொடங்கப்பட்டது” என்று அருளிச்செய்கிறார்.

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இரண்டு தன்மைகளை உடையவன் – தோஷங்களுக்கு எதிர்த்தட்டாகவும், நற்குணங்களுக்கு இருப்பிடமாகவும் விளங்குகிறான். இரண்டு உலகங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவன் – அதாவது நித்ய விபூதி என்கிற பரமபதம் மற்றும் லீலா விபூதி என்கிற ஸம்ஸாரம். நாராயணன், புருஷோத்தமன், பரப்ரஹ்மம் என்றெல்லாம் அழைக்கப்படுபவன். இவ்வுலகில் கட்டுப்பட்டிருக்கும் பத்த ஜீவாத்மாக்களை ரக்ஷிப்பதற்காக தானே தன் சோதிவாய் மலர்ந்து இந்த கீதா சாஸ்த்ரத்தை அருளிச்செய்தான். இந்த சாஸ்த்ரத்தை அவன் அருளியவிதம் மிக ஆச்சர்யமானது.

பாண்டவர்களுக்கும் துர்யோதனாதிகளுக்கும் யுத்தம் நிகழும் சூழ்நிலையை முதலில் தானே தூது போய் ஏற்படுத்துகிறான். அர்ஜுனனுக்குத் தானே ஸாரதியாக (தேரோட்டியாக) இருக்கிறான். அதற்குப் பிறகு, யுத்தகளத்தில் அனைத்து ஸேனைகளும் கூடியிருந்த ஸமயத்தில், போர் புரிவதில் உறுதியாக இருந்த அர்ஜுனன் ஆணைப்படித் தேரைக் கொண்டு போய் இரண்டு ஸேனைகளுக்கும் நடுவில் நிறுத்துகிறான். அங்கே கூடியுருக்கும் பீஷ்மர், த்ரோணர் போன்றவர்களைக் கண்ட அர்ஜுனன் கலங்கத் தொடங்குகிறான். யுத்தம் செய்ய வேண்டுமா என்னும் அளவுக்குக் கலக்கத்தை அடைந்து, யுத்தத்தினால் நேரும் தீங்குகளைச் சொல்லி யுத்தம் வேண்டாம் என்று எம்பெருமானிடத்தில் வழக்காடுகிறான்.

இவற்றை எல்லாம், சிறந்த க்ருஷ்ண பக்தனான ஸஞ்சயன் தன்னுடைய குருவான வ்யாஸரின் அருளினால், த்ருதராஷ்ட்ரனுக்குத் தன்னுடைய ஞானக் கண்ணால் நேரில் காண்பதைப் போலக் கண்டு, ஒவ்வொரு விஷயமாக விளக்குகிறான்.

இவையெல்லாம் ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் முதல் அத்யாயத்தில் உள்ள விஷயங்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org