ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 13 (க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 12

கீதார்த்த ஸங்க்ரஹம் பதினேழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதின்மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதின்மூன்றாம் அத்யாயத்தில், உடலின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மையை அடைவதற்கான வழிமுறைகள், ஆத்மாவும் உடலும் கட்டுப்பட்டிருப்பதற்கான காரணம் மற்றும் ஆத்மாவை உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முறை ஆகியவை பேசப்படுகின்றன.” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச ।
இத³ம் ஶரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே ।
ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு꞉ க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³꞉ ॥

ஸ்ரீ பகவான் சொன்னான் – அர்ஜுனா! இந்த உடல் (ஆத்மாவின் இன்பத்திற்கான) க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது. ஆத்ம ஞானிகள் (ஆத்மாவைப் பற்றி அறிந்தவர்கள்) இந்த உடலை அறிந்த அத்தகைய நபரை க்ஷேத்ரஜ்ஞன் என்று அழைக்கிறார்கள்.

குறிப்பு: இந்த ஸமயத்தில் ஆத்மாவுக்கும் உடலுக்குமான தெளிவான வேறுபாட்டை விளக்குவது முக்யம் என்று உணர்ந்ததால், அர்ஜுனன் கேட்காதபோதும், ஆத்மா மற்றும் உடலின் தன்மைகளை விளக்குகிறான் பகவான்.

ச்லோகம் 2

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத ।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞானம் யத்தஜ்ஜ்ஞானம் மதம் மம ॥

பரத குலத்தில் உதித்தவனே! என்னை (தேவர்கள், மனிதர்கள் முதலான) அனைத்து உடல்களிலும் மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஆத்மாக்களிலும் இருக்கும் அந்தர்யாமியாக அறிக; “உடலும் ஆத்மாவும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை, இரண்டுமே என்னை அந்தராத்மாவாகக் கொண்டுள்ளன” என்பதை விளக்கும் இந்த ஞானமே உண்மையான ஞானமாகக் கருதப்படுகிறது – இது எனது முடிவு.

குறிப்பு: பகவான் அனைத்து சித் மற்றும் அசித் வஸ்துக்களுக்கும் அந்தர்யாமியாகத் தன்னை விளக்குகிறான்; மேலும் இரண்டின் மீதும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்.

3வது ச்லோகத்தில், முதல் 2 ச்லோகங்களில் சுருக்கமாக விளக்கப்பட்ட இரண்டு வஸ்துக்களின் தன்மைகளை விரிவாகக் கூறப் போவதாக சபதம் செய்கிறான்.

4வது ச்லோகத்தில், ஆத்மா மற்றும் அசித் பற்றி அவன் விளக்கப்போகும் உண்மையான ஞானத்தை முன்பே முனிவர்களாலும், வேதம் மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் விளக்கப்பட்டுள்ளதைச் சொல்லுகிறான்.

5 மற்றும் 6வது ச்லோகங்களில், ஆத்மாவுக்கான செயல்பாட்டுக்கான இடமாக அசித்தைப் பற்றிச் சுருக்கமாக விளக்கினான்.

அடுத்த 5 ச்லோகங்களில், அதாவது 7 முதல் 11 வது ச்லோகம் வரை, பகவான் ஆத்மாவை உணர விரும்புபவர்களிடம் எதிர்பார்க்கும் குணங்களை விளக்குகிறான். ஆத்மஜ்ஞான ஸாதனமாக கூறப்படும் பணிவு, புகழைத் தேடாமல் இருத்தல், அஹிம்ஸா, அமைதி, நேர்மை போன்ற இருபது குணங்கள் அவர்களிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அடுத்த 6 ச்லோகங்களில், அதாவது 12 முதல் 17வது ச்லோகம் வரை, க்ஷேத்ரஜ்ஞன், அதாவது சித் எனப்படும் ஆத்மாவின் தன்மை, க்ஷேத்ரத்தை அறிந்தவனாக இருப்பது என விளக்கப்பட்டுள்ளது. ஆத்மாவின் உண்மையான தன்மை மிகவும் பரிசுத்தமானது; அவன் உடலுடன் இணைக்கப்படவில்லை என்றாலும், அவன் பல்வேறு வகையான உடல்களைத் தாங்குகிறான். ஆத்மாக்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். அவன் மிகவும் நுண்ணியமானவன்; அவனைப் புரிந்துகொள்வது கடினம். அவன் உயிரினங்களின் இதயங்களில் வசிக்கிறான். அவன் ஞானம் மூலம் உணரப்படுகிறான்.

ச்லோகம் 18

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞானம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத꞉ ।
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே ॥

இவ்வாறு, க்ஷேத்ரம் எனப்படும் உடல், ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான வழி, அறியப்பட வேண்டிய ஆத்மாவைப் பற்றிய உண்மையான தன்மை ஆகிய அனைத்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றையும் உண்மையாக அறிந்த என் பக்தன் ஸம்ஸாரத்தில் பற்றில்லாமல் இருக்கத் தகுதி பெறுவான்.

19 முதல் 22வது ச்லோகம் வரை, ஆத்மாவுக்கும் அசித்துக்கும் இடையிலான பந்தத்துக்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. இந்த பந்தம் ஒரு ஆதி (ஆரம்பம்) இல்லாதது (எப்பொழுதும் இருப்பது) என்று கூறப்படுகிறது. இந்த பந்தம் ஆத்மாவும் அசித்தும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்ததால் ஏற்பட்டது.

ச்லோகம் 23

ய ஏநம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை꞉ ஸஹ ।
ஸர்வதா² வர்தமானோ(அ)பி ந ஸ பூ⁴யோ(அ)பி⁴ஜாயதே ॥

முன்பே விளக்கப்பட்ட இந்த ஆத்மாவைப் பற்றியும் ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களையுடைய ப்ரக்ருதியைப் பற்றியும் உண்மை அறிவை உடைய ஒருவன், தேவ, மனுஷ்ய, திர்யக் (மிருகம், பக்ஷி) மற்றும் ஸ்தாவரம் (மரம், செடி) போன்ற எந்த உடலில் கட்டுப்பட்டிருந்தாலும், மீண்டும் இவ்வுலகில் பிறக்க மாட்டான்.

அடுத்த 2 ச்லோகங்களில், ஆத்ம ஞானத்தின் நிலைகளை விளக்குகிறான்.

ச்லோகம் 26

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் ।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம் யோகா³த் தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ ॥

பரத குலத் தலைவனே! அசையாப் பொருளாகவோ அல்லது அசையும் பொருளாகவோ எத்தனைப் பொருள்கள் பிறந்தாலும், அவை அனைத்தும் க்ஷேத்ரம் (உடல்) மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் (ஆத்மா) ஆகிய இரண்டின் சேர்த்தியால் தான் உண்டாகின்றன என்பதை அறிந்து கொள்.

27வது ச்லோகம் முதல் இந்த அத்யாயம் முடியும் வரை, ஆத்மாவையும் அசித்தையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விளக்குகிறான். ஆத்மா அழியாதவன்; அசித் தற்காலிகமானது. ஆத்மா கட்டுப்படுத்துபவன்; அசித் கட்டுப்படுத்தப்படுகிறது; ஆத்மா செயல்களுக்கு சாட்சி; உடல் தான் செயல்களைச் செய்கிறது.

ச்லோகம் 34

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞானசக்ஷுஷா ।
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம் ॥

இந்த அத்யாயத்தில் விளக்கப்பட்டுள்ள க்ஷேத்ரம் (உடல்) மற்றும் க்ஷேத்ரஜ்ஞன் (ஆத்மா) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும், பல உருவத்தில் இருக்கும் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுதலை பெற வழியாக இருக்கும் ஞானத்தைப் பெற உதவும் அமாநித்வம் முதலான குணங்கள் ஆகியவற்றை அறிந்தவர்கள் ஆத்மாவான தன்னையே அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org