ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 6 (அப்யாஸ யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 5

கீதார்த்த ஸங்க்ரஹம் பத்தாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஆறாம் அத்யாயத்தின் கருத்தை, “ஆறாவது அத்தியாயத்தில் (ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடைவிக்கும்) யோகம் செய்யும் முறை, நான்கு வகையான யோகிகள், யோகத்தை நோக்கிக் கொண்டு செல்லும் யோகப் பயிற்சி, பற்றின்மை, மற்றும் பகவானிடத்தில் செய்யப்படும் பக்தி யோகத்தின் பெருமை போன்றவை பேசப்பட்டன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச |
அநாஶ்ரித꞉ கர்மப²லம் கார்யம் கர்ம கரோதி ய꞉ |
ஸ ஸந்ந்யாஸி ச யோகீ³ ச ந நிரக்³நிர் ந சாக்ரிய꞉ ||

ஸ்வர்கம் போன்ற பலன்களைப் பற்றாமல், அந்தக் கர்ம யோகத்தை அதுவே ப்ரயோஜனமாகச் செய்பவன், ஞான யோக நிஷ்டனாக இருக்கிறான்; அவன் கர்ம யோக நிஷ்டனாகவும் இருக்கிறான்; அக்னியை வளர்க்கும் யாகம் போன்ற கர்மங்களிலிருந்து அவன் ஒதுங்கியும் இருக்கவில்லை; ஞான யோகத்தைத் தனித்துச் செய்பவனாகவும் இருக்கவில்லை

குறிப்பு: முதல் ஒன்பது ச்லோகங்களில், பகவான் மீண்டும் ஞானத்தை உள்ளடக்கிய கர்ம யோகத்தை விரிவாக விளக்குகிறான்,.

ச்லோகம் 5

உத்³த⁴ரேதா³த்மநாத்மானம் நாத்மானமவஸாத³யேத் |
ஆத்மைவ ஹ்யாத்மனோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மன: ||

ஒருவன் (உலக இன்பங்களிலிருந்து விலகிய) மனத்தால் தன்னையே உயர்த்திக் கொள்ள வேண்டும்; உலக இன்பங்களில் பற்றுள்ள மனத்தால் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும்; (உலக இன்பங்களிலிருந்து பிரிந்திருக்கும்) மனமே ஒருவனின் உறவினன்/நண்பன் மற்றும் (உலக இன்பங்களில் இணைந்திருக்கும்) மனமே எதிரியும் கூட.

குறிப்பு: தன்னை உயர்த்திக் கொள்வதில் மனதின் முக்கியத்துவம் இங்கே காட்டப்படுகிறது.

ச்லோகம் 10

யோகீ³ யுஞ்ஜீத ஸததமாத்மானம்ʼ ரஹஸி ஸ்தி²த꞉ |
ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்³ரஹ꞉ ||

அத்தகைய கர்ம யோகி, ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட நேரத்தில் யோகத்திற்கு ஒதுக்கி, தனியான இடத்தில் தனிமையில் இருந்து கொண்டு, அலைந்து திரியும் மனதைக் கட்டுப்படுத்தி, ஆசையற்றவனாக, என்னுடையது என்ற எண்ணம் இல்லாமல், த்யானத்தில் ஈடுபட்டுத் தன் ஆத்மாவைக் காண முயல்வான்.

குறிப்பு: 10வது ச்லோகம் முதல் 28வது ச்லோகம் வரை, பகவான் யோகம் செய்யும் முறையை விளக்குகிறான்.

ச்லோகம் 11

ஶுசௌ தே³ஶே ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸனமாத்மன꞉ |
நாத்யுச்ச்²ரிதம் நாதிநீசம் சைலாஜினகுஶோத்தரம் ||

பட்டுத் துணி, மான் தோல் மற்றும் தர்ப்பைப் புல் ஆகியவற்றை (தலைகீழ் வரிசையில் – அதாவது முதலில் தர்ப்பைப் புல், அதன் மேல் மான் தோல் கடைசியாக பட்டுத் துணி) ஒரு உறுதியான (மரம் முதலான பொருள்களால் பண்ணப்பட்ட) ஆஸனத்தில் வைத்து, அதை மிகவும் உயரமாகவோ தாழ்வாகவோ வைக்காமல், ஒரு சுத்தமான இடத்தில், உறுதியாக அதை நிறுவ வேண்டும்.

ச்லோகம் 12

தத்ரைகாக்³ரம் மன꞉ க்ருத்வா யதசித்தேந்த்³ரியக்ரிய꞉ |
உபவிஶ்யாஸனே யுஞ்ஜ்யாத்³யோக³மாத்ம விஶுத்³த⁴யே ||

[முந்தைய ஸ்லோகத்தில் விளக்கப்பட்ட] அந்த ஆஸனத்தில் அமர்ந்து ஒருவன் தன் மனதை ஒருமுகப்படுத்தி, மனம் மற்றும் புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, ஆத்மாவைக் காண்பதில் ஈடுபட்டு இந்த ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.

குறிப்பு: 13வது ச்லோகத்தில், உடலின் நிலை மற்றும் கண்களை மூக்கின் நுனியில் கவனம் செலுத்துதல் விளக்கப்பட்டுள்ளன. 14 வது ச்லோகத்தில், ப்ரஹ்மசர்யம் விளக்கப்பட்டுள்ளது. சிற்றின்பத்தின் மீதான பற்றுதலை விடுவது ப்ரஹ்மசர்யம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 15வது ச்லோகத்தில், இந்த முறையில் யோகம் செய்பவர்கள் ஆத்ம ஞானத்தை அடைவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. 16 மற்றும் 17 வது ச்லோகங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுப் பழக்கம் மற்றும் தூக்கப் பழக்கங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பின்னர், என்னுடையது என்கிற எண்ணத்தை விடுவது விளக்கப்படுகிறது.

ச்லோகம் 29

ஸர்வபூ⁴தஸ்த²மாத்மானம் ஸர்வபூ⁴தானி சாத்மனி |
ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஶன꞉ ||

யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவன், அனைத்து ஆத்மாக்களிலும் ஒரே நிலையில் உள்ள ஞானம் மற்றும் ஆனந்தத்தைப் பார்ப்பதால், தன்னை அனைத்து ஆத்மாக்களைப் போலவும் அனைத்து ஆத்மாக்களையும் தன்னைப் போலவும் பார்க்கிறான்.

குறிப்பு: அனைத்து ஆத்மாக்களின் விஷயத்திலும் ஸமமான நோக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த ச்லோகத்திலிருந்து, 4 ச்லோகங்களில், நான்கு வகையான யோகிகள் விளக்கப்பட்டுள்ளனர்.

ச்லோகம் 32

ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோ(அ)ர்ஜுன |
ஸுக²ம் வா யதி³ வா து³꞉க²ம் ஸ யோகீ³ பரமோ மத꞉ ||

அர்ஜுனா! எல்லா இடங்களிலும், ஆத்மாக்களுக்கு ஸாம்யம் இருப்பதால், தன்னிலும் மற்றவர்களிலும் உள்ள (குழந்தையைப் பெற்றெடுப்பது போன்றவற்றில் ஏற்படும்) மகிழ்ச்சியையும் (குழந்தையை இழப்பதால் ஏற்படும்) துக்கத்தையும் எவன் ஸமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகி உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

அடுத்த 2 ஸ்லோகங்களில், மனதைக் கட்டுப்படுத்துவதில் உள்ள ச்ரமத்தைப் பற்றி அர்ஜுனன் க்ருஷ்ணனுக்கு “இது காற்றைக் கட்டுப்படுத்துவதை விடக் கடினமானது.” என்று தெரிவிக்கிறான்,

ச்லோகம் 35

ஶ்ரீப⁴க³வானுவாச |
அஸம்யதாத்மனா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி꞉ |
வஶ்யாத்மனா து யததா ஶக்யோ(அ)வாப்துமுபாயத꞉ ||

க்ருஷ்ணன் பதிலளிக்கிறான்:

வலிமைமிக்க தோள்களை உடையவனே! குந்தியின் மகனே! அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதில் ஸந்தேஹமில்லை; இருந்தாலும், (ஆத்மகுணங்களில் – நற்பண்புகளில்) பயிற்சி செய்வதன் மூலமாகவும் உலக விஷயங்களில் வெறுப்பை வளர்ப்பதன் மூலம், அந்த மனது (ஓரளவுக்குக்) கட்டுப்படுத்தப்படுகிறது.

குறிப்பு: 35வது மற்றும் 36வது ச்லோகங்களில், பயிற்சியின் மூலம் மனதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை பகவான் விளக்குகிறான்.

அடுத்த 3 ச்லோகங்களில், அர்ஜுனன் யோகத்தில் ஈடுபடத் தொடங்கி, அதை முடிப்பதற்குள் தோல்வியடைந்தவனின் கதி என்ன என்று கேட்கிறான்.

40வது ச்லோகத்தில் இருந்து, முன்பு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பகவான் பதில் அளிக்கிறான். அத்தகையவன் யோகத்தை அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்வதற்கு அநுகூலமான குடும்பங்களில் பிறப்பான் என்று விளக்குகிறான்.

ச்லோகம் 47

யோகி³நாமபி ஸர்வேஷாம் மத்³க³தேனாந்தராத்மனா |
ஶ்ரத்³தா⁴வான்ப⁴ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத꞉ ||

என்னில் ஈடுபாடு கொண்டு, என்னை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, என்னையே த்யானம் செய்பவன், முன்பு சொன்ன யோகிகள் மற்றும் தபஸ்விகள் (தவம் செய்பவர்கள்) போன்ற அனைவரையும் விடப் பெரியவனாக என்னால் கருதப்படுகிறான்.

குறிப்பு: யோகிகளில் தன்னிடம் விடாத பக்தி கொண்டவனே சிறந்த யோகி என்று பகவான் முடிக்கிறான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org