ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 9 (ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 8

கீதார்த்த ஸங்க்ரஹம் பதின்மூன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஒன்பதாம் அத்யாயத்தின் கருத்தை, “ஒன்பதாம் அத்தியாயத்தில், அவனுடைய தனிப் பெருமை, மனித உருவத்தில் இருந்தாலும் உயர்ந்தவனாக இருப்பது, மஹாத்மாக்களான அந்த ஞானிகளின் பெருமை மற்றும் உபாஸனம் என்று அழைக்கப்படும் பக்தி யோகம் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யனஸூயவே |
ஜ்ஞானம் விஜ்ஞானஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா⁴த் ||

ஸ்ரீ பகவான் கூறினான்
என் மீது பொறாமை கொள்ளாத உனக்கு, உபாஸனம் (பக்தி யோகம்) பற்றிய இந்த மிக ரஹஸ்யமான அறிவை, இந்த உபாஸனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுடன் விளக்குகிறேன். இதை அறிந்த நீ அனைத்து புண்ய பாபங்களிலிருந்தும் விடுபடுவாய்.

குறிப்பு: உயர்ந்த அறிவுரைகளை பகவானிடமிருந்து நேரடியாகப் பெறுவதற்கான தகுதி, அவன் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பதுதான்.

ச்லோகம் 2

ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் |
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம் ||

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்தது, ரஹஸ்யங்களில் சிறந்தது, பாவங்களை நீக்குவதில் சிறந்தது, என்னை உணர உதவுவது, என்னை அடைவதற்கான வழி, செயல்படுத்த எளிதானது, (பலன்களை வழங்கிய பின்னரும்) அழியாதது.

குறிப்பு: பக்தி யோகத்தின் பெருமை இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த ச்லோகத்தில், பக்தி யோகத்தை அனுஷ்டிக்காதவர்கள் ஸம்ஸாரத்தில் துன்பப்படுவார்கள் என்றும், அதை அனுஷ்டிக்காததற்குக் காரணம் நம்பிக்கையின்மை என்றும் பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 4

மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்தினா |
மத்ஸ்தா²னி ஸர்வபூ⁴தானி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த꞉ ||

(சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களால் பண்ணப்பட்ட) இந்த உலகங்கள் அனைத்தும் எனது நுண்ணியதான அந்தர்யாமி நிலையால் வ்யாபிக்கப்பட்டுள்ளன; எல்லா வஸ்துக்களும் என்னில் இருக்கின்றன; ஆனால் நான் அவற்றில் இல்லை (அவை என்னைச் சார்ந்து இருப்பதைப் போல இல்லை)

குறிப்பு: இந்த ச்லோகத்திலும் அடுத்த ச்லோகத்திலும், பகவானின் பெருமை காட்டப்படுகிறது. இப்படிப்பட்ட பலனைத் தரும் பக்தி யோகத்தின் பெருமையைக் காட்டவே இது விளக்கப்படுகிறது.

ச்லோகம் 5

ந ச மத்ஸ்தா²னி பூ⁴தானி பஶ்ய மே யோக³மைஶ்வரம் |
பூ⁴தப்⁴ருன்ன ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வன꞉ ||

அவை என்னில் (தண்ணீர் பானையால் தாங்கப்படுவது போல) இல்லை; என் விருப்பத்தின் மூலம் [எளிதாகத்] தாங்கப்படுகின்றன; இதோ என் ஸங்கல்பம் (தெய்வீக சித்தம்), ஈச்வரனான என்னுடைய செல்வம். நான் அனைத்து வஸ்துக்களையும் தாங்குபவன்; ஆனால் அவற்றால் நான் அதேபோலத் தாங்கப்படுவதில்லை; என் ஸங்கல்பம் மட்டுமே அவற்றின் இருப்பு, ரக்ஷணம் மற்றும் கட்டுப்பாட்டிற்குக் காரணம்.

குறிப்பு: “அவை என்னில் இல்லை” என்று பகவான் கூறும்போது, அந்த வஸ்துக்கள் அவனிடம் இல்லை என்று அர்த்தமல்ல. நிச்சயமாக பகவானே அனைத்துக்கும் இளைப்பாறும் இடம். ஆனால் அவன் “வஸ்துக்களில் நான் இருந்து அவற்றைத் தாங்குவதைப் போலல்லாமல், அவை என்னிடத்தில் இருக்கும்போது அவை என்னைத் தாங்குவதில்லை” என்று கூறுகிறான்

அடுத்த ச்லோகத்தில், 5வது ச்லோகத்தில் காட்டப்பட்டுள்ள கொள்கையை விளக்க பகவான் ஒரு உதாரணத்தைத் தருகிறான்.

7வது ச்லோகத்தில், அவனது ஸங்கல்பம் அனைத்து உலகங்களின் இருப்பு மற்றும் செயல்பாடுகளை நடத்துகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.

8வது ச்லோகத்தில், படைப்பு மேலும் விளக்கப்பட்டுள்ளது.

9வது ஸ்லோகத்தில், தான் படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தாலும், அதைச் செய்வதால் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்று கூறுகிறான்.

10வது ச்லோகத்தில், இந்தச் செயல்களில் அவனது முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

ச்லோகம் 11

அவஜானந்தி மாம் மூடா⁴ மானுஷீம் தனுமாஶ்ரிதம் |
பரம் பா⁴வமஜானந்தோ மம பூ⁴தமஹேஶ்வரம் ||

எனது உயர்ந்த நிலையைப் பற்றி அறியாத மூடர்கள், எல்லாப் பொருள்களுக்கும் அதிபதியாக இருந்தும், மனித உருவம் எடுத்த என்னை அவமதிக்கிறார்கள்.

குறிப்பு: பகவான் தனது பெருமையை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறான். அடுத்த ச்லோகத்தில் அவனுடைய பெருமையை மக்கள் புரிந்து கொள்ளாததற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.

ச்லோகம் 13

மஹாத்மானஸ்து மாம் பார்த்த² தை³வீம்ʼ ப்ரக்ருதிமாஶ்ரிதா: |
ப⁴ஜந்த்யனன்யமனஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் ||

குந்தியின் மகனே! ஆனால் சிறந்த ஆத்மாக்களான ஞானிகளோ, தெய்வீகத் தன்மையைப் பெற்று, என்னையே எல்லா வஸ்துக்களையும் படைப்பவனாகவும் அழிவற்றவன் என்றும் அறிந்து, வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல், என்னிடமே பக்தியில் ஈடுபட்டுள்ளனர்.

ச்லோகம் 14

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஶ்ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே ||

[அந்த ஞானிகள்] எப்போதும் என்னைப் பற்றிப் பாடுவதில் பக்தியுடன் ஈடுபட்டு, உறுதியான விருப்பத்துடன், முயற்சிகள் செய்து, என்னை வணங்கி, எப்போதும் என்னுடன் இருக்க விரும்பி, என்னை த்யானிக்கிறார்கள்.

அடுத்த ச்லோகத்தில், பகவான் எப்படிச் சிலர் தன்னை ஞானத்தின் மூலம் வழிபடுகிறார்கள் என்பதை விளக்குகிறான்.

அடுத்த 4 ச்லோகங்களில், அதாவது 16வது ச்லோகம் தொடங்கி 19வது ச்லோகம் வரை, பகவான் இந்த உலகில் யாகம் தொடர்பான அம்சங்களை எவ்வாறு தனது ப்ரகாரமாகக் (பிரிக்க முடியாத அம்சமாகக்) கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறான்.

அடுத்த 2 ச்லோகங்களில், அதாவது 20வது மற்றும் 21வது ச்லோகங்களில், சிலர் எப்படி லௌகிக இன்பங்களை மட்டுமே அடையப் பார்க்கிறார்கள் என்பதை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 22

அனன்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜனா꞉ பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தானாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் ||

வேறு எந்த நோக்கமும் இன்றி என்னைப் பற்றியே சிந்தித்து, என்னை (எனது மங்களகரமான குணங்களுடனும், செல்வத்துடனும்) முழுவதுமாக வழிபடும், என்னுடன் எப்போதும் இருக்க விரும்புகிற அந்த மஹான்களுக்கு, நான் யோகத்தையும் (என்னை அடைவது) க்ஷேமத்தையும் (ஸம்ஸாரத்துக்குத் திரும்பி வராமல் இருப்பது) அருளுகிறேன்.

ச்லோகம் 23

யேத்வன்யதே³வதா ப⁴க்தா யஜந்தே ஶ்ரத்³த⁴யான்விதா: |
தே(அ)பி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் ||

குந்தியின் மகனே! மற்ற தெய்வங்கள் (இந்த்ரன், ருத்ரன், ப்ரஹ்மா மற்றும் பலர்) மீது பக்தி கொண்டவர்களும், யாகம் போன்றவற்றில் அவர்களை நம்பிக்கையோடு வழிபடுபவர்களும் (அவை வணங்கத்தக்கவை என்று கருதி), என்னையே அந்த யாகம் முதலியவை மூலமாக வணங்குகிறார்கள், ஆனால் வேதத்தில் விதிக்கப்படாத விதத்தில் வணங்குகிறார்கள் (எம்பெருமான் அனைத்து தேவதைகளுக்கும் அந்தர்யாமி என்பதைப் புரிந்து கொண்டு யாகம் முதலியவற்றில் ஈடுபட வேண்டும்).

ச்லோகம் 24

அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜானந்தி தத்த்வேனாதஶ்ச்யவந்தி தே ||

நானே எல்லா யாகங்களையும் அனுபவிப்பவன் மற்றும் எல்லாப் பலன்களையும் கொடுப்பவன். பூர்வ பாகத்தில் (சடங்கு சார்ந்த அம்சங்கள்) மட்டுமே ஈடுபடுபவர்கள் மற்றும் என்னை உண்மையாக (அந்தர்யாமியாக) அறியாதவர்கள் முக்கியப் பலன்களை இழக்கிறார்கள்.

அடுத்த ச்லோகத்தில், வெவ்வேறு இலக்குகளைக் கொண்டவர்கள் அத்தகைய இலக்குகளை எவ்வாறு அடைகிறார்கள் என்பதை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 26

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஶ்நாமி ப்ரயதாத்மன꞉ ||

எவன் இலையையோ, பூவையோ, பழத்தையோ, நீரையோ அன்புடன் என்னிடம் ஸமர்ப்பிக்கிறானோ, அந்தத் தூய்மையான உள்ளம் கொண்டவரால் அன்புடன் அர்ப்பணிக்கப்படும் அத்தகைய பொருளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

குறிப்பு: பகவானின் ஸௌலப்யம் (எளிதாக அணுகக்கூடிய தன்மை) இங்கே விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த ச்லோகத்தில், எல்லாவற்றையும் அவனுக்கு ஸமர்ப்பணமாகச் செய்ய வேண்டும் என்று விளக்குகிறான்.

28வது ச்லோகத்தில், பக்தி யோகம் செய்வதன் பலனை பகவான் அறிவிக்கிறான்.

ச்லோகம் 29

ஸமோ(அ)ஹம் ஸர்வபூ⁴தேஷு ந மே த்³வேஷ்யோ(அ)ஸ்தி ந ப்ரிய: |
யே ப⁴ஜந்தி து மாம் ப⁴க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||

நான் (என்னிடம் சரணடையும்) அனைத்து உயிரினங்களுக்கும் சமமானவன்; என்னைப் பொறுத்தவரை, யாரும் என்னைச் சரணடைய (அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதால்) தகுதியற்றவர்கள் அல்ல; மற்றும் என்னைச் சரணடைய யாரும் (அவர்கள் உயர்ந்தவர்கள் என்பதால்) தகுதியானவர்கள் அல்ல; என் மீது பக்தியைப் பெறத் தங்கள் அன்பை வெளிப்படுத்துபவர்கள், என்னில் வாழ்கிறார்கள், நானும் அவர்களில் வாழ்கிறேன்

ச்லோகம் 30

அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமனன்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய꞉ ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ꞉ ||

ஒருவன் மிகவும் தாழ்ந்த குணங்கள்/நடத்தை உடையவனாக இருந்தாலும், வேறு எந்தப் பலனையும் விரும்பாமல் என்னை வழிபட்டால், அவன் ஞானிகளில் சிறந்தவனே; அவன் பாராட்டப்பட வேண்டியவன். ஏனென்றால், அவன் (என் விஷயத்தில்) மிகவும் உறுதியான நம்பிக்கையும் பற்றும் கொண்டவன்.

அடுத்த ச்லோகத்தில், பகவான், அத்தகைய பக்தன் சிறிது காலத்திற்குள்ளே எவ்வாறு நல்லொழுக்கமுள்ளவனாக மாறுகிறான் என்பதை விளக்குகிறான்.

ச்லோகம் 32

மாம் ஹி பார்த்த² வ்யபாஶ்ரித்ய யே(அ)பி ஸ்யு꞉ பாபயோனய꞉ |
ஸ்த்ரியோ வைஶ்யாஸ்ததா² ஶூத்³ராஸ்தே(அ)பி யாந்தி பராம் க³திம் ||

குந்தியின் மகனே! முன் பிறவியில் செய்த பாபம் காரணமாகப் பெண்களும், வைச்யர்களும், சூத்ரர்களும் ஆகிய தாழ்ந்த பிறவிகளைப் பெற்றவர்களும் பரிபூர்ண சரணாகதியின் மூலம் என்னை அடைகிறார்கள்; அவர்களும் உயர்ந்த இலக்கை அடைகிறார்கள்.

குறிப்பு: இங்கு பெண்கள், வைச்யர்கள் மற்றும் சூத்ரர்கள் தாழ்ந்த பிறவிகளாகக் காட்டப்படுவதற்குக் காரணம், அவர்களுக்கு வேதத்தில் அதிகாரமில்லாததால் கர்ம, ஞான மற்றும் பக்தி யோகம் போன்றவற்றில் ஈடுபடும் உரிமை இல்லாததாலேயே ஆகும். உண்மையில், அடுத்த ச்லோகத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஸம்ஸாரத்தில் அனைத்துப் பிறவிகளும் தற்காலிக மற்றும் துக்கமான சூழ்நிலையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகையால் ஸம்ஸாரத்தில், அனைத்துப் பிறவிகளும் தாழ்ந்தவையே. பகவான் சரணாகதி அனைவருக்கும் பொருத்தமானது என்பதை இங்கேயும் விளக்கி, இறுதியில் மேலும் வலியுறுத்துவான்.

அடுத்த ச்லோகத்தில், ப்ராஹ்மணர்களும், ராஜரிஷிகளும் பகவானிடம் பக்தியுடன் இருந்தால், அவர்கள் பகவானைக் கண்டிப்பாக அடைவார்கள் என்று கூறுகிறான்.

ச்லோகம் 34

மன்மனா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மானம் மத்பராயண꞉ ||

உன் மனதை என் மீது நிலை நிறுத்து. (மேலும்) என் மீது மிகுந்த அன்பு வைத்திரு. (மேலும்) என்னைப் பூஜை செய். என்னை வணங்கு. என்னை உனது உயர்ந்த குறிக்கோளாக வைத்துக்கொள். இந்த முறையில் மனதைப் பயிற்றுவிப்பதன் மூலம், நீ நிச்சயமாக என்னை அடைவாய்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org