ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 8 (அக்ஷர பரப்ரஹ்ம யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 7

கீதார்த்த ஸங்க்ரஹம் பன்னிரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் எட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “எட்டாவது அத்தியாயத்தில், இவ்வுலகச் செல்வத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தி, இங்கிருக்கும் சரீரத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட பிறகு தன் ஆத்மாவையே அனுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி மற்றும் பகவானின் திருவடித் தாமரைகளை அடைய விரும்பும் ஞானி என்று மூன்று விதமான பக்தர்களால் அறிந்து கொண்டு அனுஷ்டானத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு வகையான கொள்கைகள் பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச .
கிம் தத்³ ப்³ரஹ்ம கிமத்⁴யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |
அதி⁴பூ⁴தம் ச கிம் ப்ரோக்தமதி⁴தை³வம் கிமுச்யதே ||

புருஷோத்தமா! ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுவது எது? அத்யாத்மம் என்று அழைக்கப்படுவது எது? கர்மம் எனப்படுவது எது? அதிபூதம் என்று அழைக்கப்படுவது என்ன? மேலும், அதிதைவம் எனப்படுவது எது?

குறிப்பு: பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கைகளைப் பற்றி அர்ஜுனன் பகவானிடம் கேட்கிறான்.

அடுத்த ச்லோகத்தில், மூன்று வகை பக்தர்களாலும் (ஐச்வர்யார்த்திகள், கைவல்யார்த்திகள் மற்றும் பகவத் கைங்கர்யார்த்திகள்) அறிய வேண்டிய அதியஜ்ஞத்தைப் பற்றிக் கேட்கிறான்.

ச்லோகம் 3

ஶ்ரீப⁴க³வானுவாச
அக்ஷரம் ப்³ரஹ்ம பரமம் ஸ்வபா⁴வோ(அ)த்⁴யாத்மமுச்யதே |
பூ⁴தபா⁴வோத்³ப⁴வகரோ விஸர்க³꞉ கர்மஸஞ்ஜ்ஞித꞉ ||

“ப்ரஹ்மம்” என்பது உலக விஷயங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட ஆத்மா ஆகும், “அத்யாத்மம்” என்பது ப்ரக்ருதியே; வம்சத்தை வளர்ப்பதற்காக (ஆண் விந்தணுவை பெண் கருப்பையில்) செலுத்தும் செயல் “கர்மம்” என்று அழைக்கப்படுகிறது.

ச்லோகம் 4

அதி⁴பூ⁴தம் க்ஷரோ பா⁴வ꞉ புருஷஶ்சாதி⁴தை³வதம் |
அதி⁴யஜ்ஞோ(அ)ஹமேவாத்ர தே³ஹே தே³ஹப்⁴ருʼதாம் வர ||

உடம்பை உடையவர்களில் சிறந்தவனே! ஐச்வர்யார்த்தியால் அறியப்பட வேண்டிய அதிபூதம் என்பது சிறந்ததான சப்தம் போன்ற உலக இன்பங்கள்; இவை இயற்கையாகவே மாற்றத்திற்கு உட்பட்டவை; அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அதிதைவதம் இந்த்ரன் போன்ற தேவர்களை விடப் பெரியவனான புருஷன். மூன்று விதமான பக்தர்களாலும் அறியப்பட வேண்டிய அதியஜ்ஞம் என்பது யாகங்களில் வணங்கப்படும் இந்த்ரன் முதலான தேவர்களுக்கு அந்தர்யாமியாக இருக்கும் நானே. அவர்கள் எனக்கு சரீரமாக உள்ளனர்.

ச்லோகம் 5

அந்தகாலே ச மாமேவ ஸ்மரன்முக்த்வா களேப³ரம் |
ய꞉ ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஶய꞉ ||

எவனொருவன் இறுதித் தருணங்களிலும் (விரும்பிய பலனை அடைய நினைக்கும் போது) என்னைத் தியானித்து தன் உடலை விடுகிறானோ, அவன் என் நிலையை அடைகிறான்; இதில் எந்த ஸந்தேஹமும் இல்லை.

குறிப்பு: இந்த ச்லோகம் மற்றும் அடுத்த இரண்டு ச்லோகங்களில், அந்திம ஸ்ம்ருதி (உடலை விட்டு வெளியேறும் முன் இறுதி நினைவுகள்) பற்றி பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 6

யம் யம் வாபி ஸ்மரன்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித꞉ ||

அர்ஜுனா! ஒருவன் உடலை விட்டு வெளியேறும்போது, கடைசி நேரத்தில் எந்த நிலையைத் தியானிக்கிறானோ, அந்த நிலையை அடைகிறான்; (ஏனென்றால்) அவன் எப்போதும் அதையே சிந்தித்திருந்தான் அல்லவா?

ச்லோகம் 7

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்⁴ய ச |
மய்யர்பிதமனோபு³த்³தி⁴ர் மாமேவைஷ்யஸ்யஸம்ஶய꞉ ||

எனவே, நீ எல்லா நேரங்களிலும் (மரணம் அடையும் வரை) என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்; போரிலும் ஈடுபடு; (இவ்வாறு) மனதையும் புத்தியையும் என்னிடத்தில் வைத்தால், நீ என்னையே அடைவாய்; இதில் எந்த ஸந்தேஹமும் இல்லை.

குறிப்பு: இந்த ச்லோகத்தில், அந்திம ஸ்ம்ருதியை அடைவதற்கான வழியாக பகவானைப் பற்றிய தொடர்ச்சியான த்யானம் பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்த ஏழு ச்லோகங்களில், மூன்று வகையான பக்தர்களும் செய்ய வேண்டிய உபாஸனத்தில் உள்ள வேறுபாடுகள், அந்திம ஸ்ம்ருதிக்கு வழிவகுக்கும் செயல்முறை மற்றும் இறுதியான குறிக்கோள் ஆகியவற்றை விளக்குகிறான்.

மீதமுள்ள ச்லோகங்களில், 15வது ச்லோகம் தொடங்கி, ஐச்வர்யார்த்தி, கைவல்யார்த்தி மற்றும் பகவத் கைங்கர்யார்த்தியால் அடையப்படும் பலன்களின் தன்மையை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 15

மாமுபேத்ய புனர்ஜன்ம து³꞉கா²லயமஶாஶ்வதம் |
நாப்னுவந்தி மஹாத்மான꞉ ஸம்ஸித்³தி⁴ம் பரமாம் க³தா꞉ ||

அந்த ஞானிகளான மஹாத்மாக்கள், என்னை அடைவதான இறுதி இலக்கை அடைந்த பிறகு, மீண்டும் எல்லா துன்பங்களுக்கும் இருப்பிடமான மற்றும் தற்காலிகமான ஒரு உடலைப் பெறுவதில்லை.

குறிப்பு: ஞானிகள் அடையும் முடிவு நிரந்தரமானது மற்றும் சிறந்தது என்பதை இங்கே நிறுவுகிறான்.

ச்லோகம் 16

ஆப்³ரஹ்மபு⁴வனால்லோகா꞉ புனராவர்தினோ(அ)ர்ஜுன |
மாமுபேத்ய து கௌந்தேய புனர்ஜன்ம ந வித்³யதே ||

அர்ஜுனா! பதினான்கு லோகங்களைக் கொண்ட ப்ரஹ்மாண்டத்தின் உள்ளே இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரை உள்ள அனைத்து உலகங்களும் அழிவுக்கு உட்பட்டது; குந்தியின் மகனே! ஆனால் என்னை அடைந்தவனுக்கு அதற்குப் பிறகு மறுபிறவி இல்லை.

குறிப்பு: ஞானிகள் பெறும் பலன் நிரந்தரமாக இருப்பதற்கான காரணம் இங்கே காட்டப்பட்டுள்ளது.

17வது ச்லோகத்தில், ப்ரஹ்மாவின் நாள் ஆயிரம் சதுர் யுகங்களைக் கொண்டதாகவும் அவன்து இரவு அதே நீளம் கொண்டது என்றும் விளக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ச்லோகங்களில், ப்ரஹ்மாவின் பதினான்கு லோகங்களைக்கொண்ட அண்டத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொருள்களின் நிரந்தரமற்ற தன்மையும் விளக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 21 வது ச்லோகங்களில், கைவல்யார்த்தியால் அடையப்படும் பலனும் நிரந்தரமானது என்பதை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 22

புருஷ꞉ ஸ பர꞉ பார்த்த² ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வனன்யயா |
யஸ்யாந்த꞉ஸ்தா²னி பூ⁴தானி யேன ஸர்வமித³ம் ததம் ||

குந்தியின் மகனே! எந்தப் பரமபுருஷனில் (உயர்ந்த இறைவன்) அனைத்து வஸ்துக்களும் உள்ளனவோ, யாரால் இவை அனைத்தும் வ்யாபிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தப் பரமபுருஷனை ஒருமுகமான பக்தியின் மூலமே அடைய முடியும்.

குறிப்பு: இங்கே, பக்தி யோகத்தின் மகத்துவத்தையும், அதன் மூலம் அடையப்படும் பகவானுக்குச் செய்யப்படும் நித்ய கைங்கர்யமாகிற பலனையும் பகவான் விளக்குகிறான்.

23 மற்றும் 24 வது ச்லோகங்களில், மோக்ஷத்திற்கு வழியாக இருக்கும் ஒளியின் பாதையான அர்ச்சிராதி கதி விளக்கப்பட்டுள்ளது.

25 வது ச்லோகத்தில், புண்ணியம் செய்தவர்களுக்கு ஸ்வர்க்கத்துக்கு வழியாக இருக்கும் புகையின் பாதையான துமாதி கதி விளக்கப்பட்டுள்ளது. ஸ்வர்க்கத்தை அனுபவித்த பிறகு, அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் கர்மத்தைச் செய்ய, பூலோகத்துக்கு வர வேண்டும்.

26வது ச்லோகத்தில் அர்ச்சிராதி கதியிலும், தூமாதி கதியிலும் பயணிப்பவர்களின் பலன்கள் முறையே நிரந்தரமானவை மற்றும் நிரந்தரமற்றவை என்று விளக்கப்பட்டுள்ளது.

27வது ச்லோகத்தில், அர்ஜுனனுக்கு அர்ச்சிராதி கதியை த்யானம் செய்யும்படி பகவான் அறிவுறுத்துகிறான்.

ச்லோகம் 28

வேதே³ஷு யஜ்ஞேஷு தப꞉ஸு சைவ தா³னே ச யத்புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் |
அத்யேதி தத்ஸர்வமித³ம் விதி³த்வா யோகீ³ பரம் ஸ்தா²னமுபைதி சாத்³யம் ||

வேதம் ஓதுதல், யாகங்கள், பலவிதமான தவங்கள் மற்றும் தானங்களில் ஈடுபடுவதால் பலனாக எது கிடைக்கும் என்று சாஸ்த்ரத்தில் சொல்லப்படும் அந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்னவாக இருந்தாலும், பக்தி யோகத்தைச் செய்பவன், இந்த இரண்டு அத்யாயங்களில் (7வது மற்றும் 8வது) விளக்கப்பட்டுள்ள பரமபுருஷனான என்னுடைய (உயர்ந்த) பெருமைகளை அறிந்து, முன்பு சொன்ன பலன்களை எல்லாம் கடந்து, பழமையான, அநாதியான உயர்ந்த ஸ்ரீவைகுண்ட லோகத்தை (ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீக இருப்பிடம்) அடைவான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org