ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 18 (மோக்ஷோபதேச யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 17

கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்திரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினெட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “இறுதியில், அதாவது, பதினெட்டாம் அத்தியாயத்தில் – அனைத்து செயல்களும் பகவானால் செய்யப்படுகின்றன, ஸத்வ குணம் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் அத்தகைய அமைதியான செயல்களின் விளைவாக மோக்ஷத்தைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த கீதா சாஸ்த்ரத்தின் ஸாரமான பக்தி மற்றும் ப்ரபத்தியும் பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

அர்ஜுன உவாச ।
ஸந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் ।
த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஶ ப்ருத²க்கேஶிநிஷூத³ன ॥

வலிமைமிக்க தோள்களை உடையவனே! புலன்களைக் கட்டுப்படுத்துபவனே! கேசி என்ற அரக்கனைக் கொன்றவனே! (உபநிஷத்துகளில் மோக்ஷத்திற்கான வழிமுறையாக விளக்கப்படும் பற்றற்ற நிலையான) ஸந்யாஸம் மற்றும் த்யாகம் ஆகியவை ஒன்றுக்கொன்று வேறுபட்டதா என்பதின் உண்மையை அறிய விரும்புகிறேன்.

அடுத்த 2 ச்லோகங்களில், முதல் ச்லோகத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பல ஞானிகளின் கருத்துக்களை பகவான் விளக்குகிறான். இவ்வுலகப் பலன்களை நோக்கமாகக் கொண்ட செயல்களை முற்றிலுமாகக் கைவிடுவது ஸந்யாஸம் என்று சிலர் கூறுகிறார்கள். பலன்களைக் கைவிடுவது ஸந்யாஸம் என்று சிலர் கூறுகிறார்கள். குறைபாடுள்ள கர்மங்களைக் கைவிடலாம் என்று சிலர் கூறுகிறார்கள். யாகம், தானம், தபஸ் இவற்றை யாராலும் கைவிட முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.

4வது ச்லோகத்திலிருந்து, பகவான் இந்த விஷயத்தில் தனது கருத்தை விளக்கத் தொடங்குகிறான்.

ச்லோகம் 5

யஜ்ஞதா³னதப꞉கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ।
யஜ்ஞோ தா³னம் தபஶ்சைவ பாவனானி மனீஷிணாம் ॥

யாகம், தானம், தபஸ் போன்ற வைதிக கர்மங்களை (முமுக்ஷுகளாலும்) கைவிட முடியாது; அவை (இறுதி வரை) செய்யப்பட வேண்டும்; (ஏனென்றால்) அவை மோக்ஷத்தை விரும்பும் அந்த உபாஸகர்களைத் தூய்மைப்படுத்தும் செயல்கள் (உபாஸனத்தை முடிப்பதைத் தடுக்கும் நீண்ட காலத் தடைகளை நீக்குகின்றன).

அடுத்த ச்லோகத்தில், இந்த கர்மங்க்களைச் செய்பவர், கர்த்ருத்வ (நான் பண்ணுகிறேன் என்கிற எண்ணம்), மமதா (என்னுடைய கர்மம் என்கிற எண்ணம்) மற்றும் பலன்களில் பற்றுதல் இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.

ச்லோகம் 7

நியதஸ்ய து ஸந்யாஸ꞉ கர்மணோ நோபபத்³யதே ।
மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ꞉ பரிகீர்தித꞉ ॥

நித்ய, நைமித்திக கர்மங்களைத் துறப்பது பொருந்தாது; மயக்கத்தினால் அத்தகைய கர்மத்தைக் கைவிடுவதற்குக் காரணம் தாமஸ குணம் காரணமாகக் கூறப்படுகிறது.

8வது மற்றும் 9வது ச்லோகங்களில், ராஜஸ குணத்தால் கர்மங்களைக் கைவிடுவது மற்றும் ஸத்வ குணத்தால் கர்த்ருத்வத்தையும் பலனையும் கைவிடுவது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

10வது ச்லோகத்தில், ஸத்வ குணத்தால் கர்த்ருத்வத்தையும் பலனையும் கைவிடுபவரின் தன்மை விளக்கப்பட்டுள்ளது

11வது ச்லோகத்தில், ஸத்வ குணத்தால் கர்த்ருத்வத்தையும் பலனையும் கைவிடுபவர் “த்யாகி” என்று அழைக்கப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளது

12வது ச்லோகத்தில், அப்ப்டிப்பட்ட த்யாகி கர்ம பலன்களை அனுபவிப்பதில்லை என்றும் மற்றவர்கள் கர்ம பலன்களை அனுபவிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது

13வது ச்லோகம் முதல் 15வது ச்லோகம் வரை, ஆத்மாவால் செய்யப்படும் கர்மங்களுக்கு ஐந்து காரணங்கள், அதாவது 1) உடல், 2) ஆத்மா, 3) மனம் மற்றும் ஐந்து கர்மேந்த்ரியங்கள், 4) ப்ராணன் மற்றும் 5) பரமாத்மா, ஆகியவை உள்ளன என்று விளக்கப்பட்டுள்ளது.

16வது மற்றும் 17வது ச்லோகங்களில், கர்த்ருத்வத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் நிலையையும், கர்த்ருத்வத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களின் நிலையையும் விளக்குகிறான்.

18வது ச்லோகத்தில், வைதிக கர்மங்களின் (வேதத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்கள்) தன்மையை விளக்குகிறான். கர்மங்களில் மூன்று அம்சங்கள் உள்ளன – கர்மத்தைப் பற்றிய ஞானம், கர்மம் மற்றும் கர்த்தா (செய்பவர்).

19வது ச்லோகத்தில், இந்த விஷயங்கள் அனைத்தும் மூன்று குணங்களின் (ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்) அடிப்படையில் வேறுபடுகின்றன என்று விளக்குகிறான்.

20 முதல் 22வது ச்லோகம் வரை, ஞானம் மூன்று குணங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

23 முதல் 25வது ச்லோகம் வரை, கர்மம் மூன்று குணங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

26 முதல் 28வது ச்லோகம் வரை, கர்த்தா மூன்று குணங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

29வது ச்லோகத்தில், புத்தி மற்றும் த்ருதி (உறுதியான நிலைப்பாடு) ஆகியவையும் மூன்று குணங்களின் அடிப்படையில் இருப்பதாக அவன் கூறுகிறான்.

30 முதல் 32வது ச்லோகம் வரை, புத்தி மூன்று குணங்களின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.

33 முதல் 35வது ச்லோகம் வரை, த்ருதி மூன்று குணங்களின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.

36வது ச்லோகத்தில், ஸுகம் மூன்று குணங்களின் அடிப்படியைல் உள்ளது என்று கூறுகிறான்.

37 முதல் 39வது ச்லோகம் வரை, மூன்று குணங்களின் அடிப்படையில் உள்ள ஸுகம் விளக்கப்படுகிறது.

40வது ச்லோகத்தில், இந்த ஸம்ஸாரத்தில் மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் யாரும் இல்லை என்று கூறி இந்தப் பகுதியை முடிக்கிறான்.

ச்லோகம் 41

ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஶாம் ஶூத்³ராணாம் ச பரந்தப ।
கர்மாணி ப்ரவிப⁴க்தானி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை꞉ ॥

எதிரிகளைத் துன்புறுத்துகிறவனே! (முந்தைய) கர்மங்களின் அடிப்படையில் பெற்ற ப்ராஹ்மணர்கள், க்ஷத்ரியர்கள், வைச்யர்கள் மற்றும் சூத்ரர்களின் குணங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தனித்தனியாக (சாஸ்த்ரத்தில்) காட்டப்படுகின்றன.

42வது ச்லோகம் முதல் 44வது ச்லோகம் வரை, ஒவ்வொரு வர்ணத்தையும் சேர்ந்த நபர்களின் இயல்புகள் மற்றும் குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ச்லோகம் 45

ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத꞉ ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர꞉ ।
ஸ்வகர்மநிரத꞉ ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு ॥

தன் வர்ணத்தின்படி செயல்களில் ஈடுபடும் ஒருவன், மோக்ஷமாகிற பலனை அடைகிறான்; தன்னுடைய வர்ணத்தின்படி செயல்படும் ஒருவன் எப்படி மோக்ஷமாகிற பலனை அடைகிறான் என்பதை இப்போது [என்னிடமிருந்து] கேள்.

ச்லோகம் 46

யத꞉ ப்ரவ்ருத்திர்பூ⁴தானாம் யேன ஸர்வமித³ம் ததம் ।
ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மானவ꞉ ॥

பரமபுருஷனிடம் இருந்து ஒவ்வொரு பொருளின் ஸ்ருஷ்டி முதலான அனைத்து அம்சங்களும் நிகழ்கின்றன; அவனாலேயே இந்த எல்லாப் பொருட்களும் வ்யாபிக்கப்படிருக்கின்றன; எவனொருவன் தன் வர்ணம் மற்றும் ஆச்ரமத்தின்படி அந்தப் பரமபுருஷனை வழிபடுகிறானோ, அவன் உயர்ந்த குறிக்கோளாகிய என்னை அடைகிறான்.

47வது ச்லோகத்தில், கர்ம யோகம் ஆத்மாவுக்கு இயற்கையானது என்பதால், குறைபாடுகளுடன் கர்ம யோகத்தைப் பின்பற்றுவது, குறையில்லாமல் ஞான யோகத்தைச் செய்ய முனைவதைக் காட்டிலும் சிறந்தது என்று கூறுகிறான்.

48வது ச்லோகத்தில், ஞான யோகத்திற்கு தகுதியானவர்கள் கூடக் கர்மயோகத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.

49வது ச்லோகத்தில், கர்ம யோகம் செய்வது ஞான யோகத்தால் கிடைக்கும் பயனான நிலைநின்ற த்யானத்துக்கு வழி வகுக்கும் என்று கூறுகிறான்.

50வது ச்லோகத்தில், அத்தகைய சிறந்த த்யானம் ஆத்மாவை உணர்வதற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறான்.

51 முதல் 53வது ச்லோகங்கள் வரை, அவன் த்யானத்தின் செயல்முறையை விளக்குகிறான்.

ச்லோகம் 54

ப்³ரஹ்மபூ⁴த꞉ ப்ரஸன்னாத்மா ந ஶோசதி ந காங்க்ஷதி ।
ஸம꞉ ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் ॥

ஆத்மாவின் உண்மையான இயல்பை உணர்ந்தவன், கலக்கமில்லாத மனம் கொண்டவன், (என்னைத் தவிர வேறு எதற்காகவும்) வருந்துவதில்லை அல்லது (என்னைத் தவிர வேறு எதற்காகவும்) ஆசைப்படுவதில்லை; (என்னைத் தவிர) அனைத்து ஜடப் பொருள்களிடமும் ஸமமாக (பற்றற்ற நிலையில்) இருந்து கொண்டு, உயர்ந்தவனான என் மீது பக்தியை அடைகிறான்

குறிப்பு: இந்த ச்லோகத்தில், பர பக்தி நிலையை அடைவது விளக்கப்பட்டுள்ளது. நமது ஸம்ப்ரதாயத்தில் பக்தியின் மூன்று நிலைகள் விளக்கப்பட்டுள்ளன – பர பக்தி (தூய்மையான அறிவின் நிலை – பகவானுடன் கூடுவது மகிழ்ச்சியானது, பகவானிடமிருந்து பிரிவது துக்கமானது); பரஜ்ஞானம் (காட்சி நிலை – மனதின் மூலம் பகவானை முழுமையாகப் பார்ப்பது); பரம பக்தி (இனி பகவானிடமிருந்து பிரிவினைத் தாங்க முடியாத நிலை – பரமபதத்தில் பகவானை அடையும் முன் நிலை).

ச்லோகம் 55

ப⁴க்த்யா மாமபி⁴ஜானாதி யாவான்யஶ்சாஸ்மி தத்த்வத꞉ ।
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஶதே தத³னந்தரம் ॥

எவன் பரபக்தியின் மூலம் அப்படிப்பட்ட இயல்பும், மனோபாவமும், இத்தகைய குணங்களும், செல்வமும் உள்ளவனுமான என்னை உண்மையாக அறிகிறானோ, அந்தப் பரமபக்தியின் மூலம் என்னை உண்மையாக அறிந்து, பிறகு என்னை முழுமையாக அடைகிறான்.

குறிப்பு: இந்தச் ச்லோகத்தில் பரஜ்ஞானம், பரம பக்தி ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

56 வது ஸ்லோகத்தில், அவரவர் வர்ணாச்ரமத்தின்படி செயல்படுபவர்கள் இறுதியில் பர பக்தி, பரஜ்ஞானம் மற்றும் பரம பக்தி ஆகியவற்றைப் பெற்று அவனை அடைவார்கள் என்று கூறுகிறான்.

57வது ச்லோகத்தில், அர்ஜுனனுக்கு இந்த யுத்தத்தை கர்த்ருத்வ, மமதா மற்றும் பல த்யாகத்துடன், தனக்கு ஸமர்ப்பணமாகச் செய்யும்படி அறிவுறுத்துகிறான்.

58வது ச்லோகத்தில், அர்ஜுனன் தனது அறிவுரைகளின்படி செயல்பட்டால், ஸம்ஸாரத்தில் துன்பங்களைக் கடந்து செல்வான் என்றும், அதைச் செய்யாவிட்டால், அது அவனுடைய அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறான்.

59 மற்றும் 60வது ச்லோகங்களில், அர்ஜுனனால் எப்படியும் சண்டைபோடுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறுகிறான்.

ச்லோகம் 61

ஈஶ்வர꞉ ஸர்வபூ⁴தானாம் ஹ்ருʼ³தே³ஶே(அ)ர்ஜுன திஷ்ட²தி ।
ப்⁴ராமயன்ஸர்வபூ⁴தானி யந்த்ராரூடா⁴னி மாயயா ॥

அர்ஜுனா! அனைவரையும் கட்டுப்படுத்தும் வாஸுதேவன், உடல் என்கிற இயந்திரத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் (அறிவின் இருப்பிடம்) இருக்கிறான், ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களால் நிறைந்திருக்கும் இந்த ஸம்ஸாரத்தில், அந்த உயிரினங்களை அந்த குணங்களுக்கு ஏற்ப செயல்பட வைக்கிறான்.

ச்லோகம் 62

தமேவ ஶரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேன பா⁴ரத ।
தத்ப்ரஸாதா³த்பராம் ஶாந்திம் ஸ்தா²னம் ப்ராப்ஸ்யஸி ஶாஶ்வதம் ॥

பரத குலத்தில் உதித்தவனே! உயர்ந்தவனான இறைவனை (என்னை) எல்லா வகையிலும் பின்பற்று; அவனுடைய கருணையால், நீ எல்லா பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைந்து நித்யமான பரமபதத்தை அடைவாய்.

63வது ச்லோகத்தில், அவன் தனது உபதேசங்களை முடித்து, அர்ஜுனனிடம் அதைப் பற்றி யோசித்துத் தனது விருப்பப்படி செயல்படுமாறு கூறுகிறான்.

64வது ச்லோகத்தில், அர்ஜுனன் அவனுக்கு மிகவும் பிடித்தவனாதலால், மீண்டும் மிகவும் ரஹஸ்யமான பக்தி யோகத்தைப் பற்றி உபதேசிக்கத் தொடங்குகிறான்..

ச்லோகம் 65

மன்மனா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே ॥

தொடர்ந்து உன் உள்ளத்தை என்னிடத்தில் வை; (மேலும்) என் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிரு; (அதுவும்) என்னை வணங்குபவனாக ஆகு; (மேலும், உன் மனம், வாக்கு மற்று உடலால்) என்னைக் கீழே விழுந்து வணங்கு; (இப்படி இருப்பதன் மூலம்) நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதுதான் உண்மை என்று உறுதியளிக்கிறேன்; (ஏனெனில்) நீ எனக்கு மிகவும் ப்ரியமானவன்.

ச்லோகம் 66

ஸர்வத⁴ர்மான்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச꞉ ॥

எல்லா உபாயங்களையும் முழுமையாகத் துறந்து, என்னை உனது ஒரே உபாயமாகக் கொள்; நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்; சோகப்படாதே.

குறிப்பு: எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்) இந்த ச்லோகத்தை இரண்டு விதமாக விளக்கியுள்ளார். இரண்டு விளக்கங்களிலும், பக்தி யோகத்துக்கான அங்கமாக ப்ரபத்தி (சரணடைதல்) கருதப்படுகிறது. கீதா பாஷ்யத்துக்கான குறிக்கோளாக இருப்பவர்கள் அனைவரும் வேதாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதால் அவர் அதை இவ்வாறு விளக்கினார். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்களை நோக்கமாகக் கொண்ட அவரது கத்ய த்ரயத்தில் (குறிப்பாக சரணாகதி கத்யம்) அவர் சரணாகதியின் உட்பொருளாக “பகவானையே மோக்ஷத்துக்கான ஒரே உபாயமாகப் பற்றுவதை” வெளியிட்டார்.

முதல் விளக்கம்

முந்தைய ச்லோகத்தில் பகவான் பக்தி யோகத்தைப் பற்றி விளக்கியபோது, அர்ஜுனன் பகவானை அடைவதற்குத் தடையாக இருக்கும் பல பாவங்களால் பக்தி யோகத்தைச் செய்வதில் உள்ள சிரமத்தை நினைத்து வருந்தத் தொடங்கினான். எனவே, பகவான் கூறுகிறான், “நீ (கர்த்ருத்வம், மமதா மற்றும் பலன்களைத் துறந்து) கர்ம, ஞான, பக்தி யோகங்களைச் செய்தால், அதிலும் அத்தகைய உபாஸனத்துக்கு என்னையே தூண்டுபவனாகவும், வணங்கப்படுபவனாகவும், அத்தகைய வழிபாட்டை அனுபவிப்பவனாகவும் கருதி, அதிலும் அதைச் செய்வதில் வரும் தடைகளை நீக்குவதற்கான உபாயமாக என்னைப் பற்றிக்கொண்டு செய்தால், நான் உனக்கு அந்தத் தடைகளை நீக்குவேன்; சோகப்படாதே”.

இரண்டாவது விளக்கம்

முந்தைய ச்லோகத்தில் பக்தி யோகத்தைப் பற்றி பகவான் விளக்கியபோது, பக்தி யோகத்தைப் பின்பற்றுவதில் தடைகள் இருப்பது தெளிவாகத் தெரிந்தது; அதுவே அர்ஜுனனின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், தடைகளை நீக்குவதற்கு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். ப்ராயச்சித்தம் செய்வதில் இருக்கும் பெரும் முயற்சியை எண்ணி, அர்ஜுனன் சோகப்படுகிறான். பகவான் சொல்கிறான் “ப்ராயச்சித்தம் என்று சொல்லப்படும் செயல்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக என்னைக் கருதி என்னைப் பற்றிக்கொள்ளலாம். நான் அந்த பாவங்களை (அந்த ப்ராயச்சித்த கர்மங்களை விட மிக விரைவாக) அகற்றுவேன், எனவே நீ சோகப்பட வேண்டியதில்லை”.

ச்லோகம் 67

இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சன ।
ந சாஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ(அ)ப்⁴யஸூயதி ॥

(என்னால் உமக்கு ரஹஸ்யமாக விளக்கப்பட்ட) இந்த சாஸ்த்ரம் (உடம்பை வருத்தித்) தவம் செய்யாதவனுக்கு உன்னால் சொல்லக் கூடாது; (உன்னிடமும் என்னிடமும்) பக்தி இல்லாதவனுக்கு அது ஒருபோதும் சொல்லக் கூடாது; கேட்க விரும்பாத ஒருவரிடம் அதைக் கூறக்கூடாது; என்னை வெறுப்பவனிடமும் சொல்லக்கூடாது.

ச்லோகம் 68

ய இத³ம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி ।
ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஶய꞉ ॥

மிகவும் ரஹஸ்யமான இந்த சாஸ்த்ரத்தை என் பக்தர்களுக்கு விளக்கிச் சொல்பவன், என்மீது உயர்ந்த பக்தியில் ஈடுபட்டு, என்னையே அடைவான்; இதில் ஸந்தேஹமே இல்லை.

ச்லோகம் 69

ந ச தஸ்மான்மனுஷ்யேஷு கஶ்சின்மே ப்ரியக்ருத்தம꞉ ।
ப⁴விதா ந ச மே தஸ்மாத³ன்ய꞉ ப்ரியதரோ பு⁴வி ॥

இவ்வுலகில், மனிதர்களில், இந்த சாஸ்த்ரத்தை விளக்குபவரைத் தவிர, எனக்குப் ப்ரியமான தொண்டு செய்தவர்கள் யாரும் இல்லை, எதிர்காலத்திலும் ப்ரியமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ச்லோகம் 70

அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ꞉ ।
ஜ்ஞானயஜ்ஞேன தேனாஹமிஷ்ட꞉ ஸ்யாமிதி மே மதி꞉ ॥

எங்கள் இருவருக்குள்ளும் முக்திக்கான வழிகளைப் பற்றிய உரையாடலாக இருந்த இந்த சாஸ்த்ரத்தைப் பாராயணம் செய்பவர்கள், ஞான யாகம் மூலம் என்னை வணங்கினவர்கள் ஆவர்; இது என் கருத்து.

ச்லோகம் 71

ஶ்ரத்³தா⁴வானனஸூயஶ்ச ஶ்ருணுயாத³பி யோ நர꞉ ।
ஸோ(அ)பி முக்த꞉ ஶுபா⁴ன் லோகான் ப்ராப்னுயாத்புண்யகர்மணாம் ॥

கேட்க விரும்புபவனும், பொறாமை இல்லாதவனும், இந்த சாஸ்த்ரத்தை கேட்பது மட்டும் செய்பவனும், (என்னிடம் பக்தியைத் தொடங்கத் தடையாக இருக்கும் பாவங்களிலிருந்து) விடுபட்டு, நற்செயல்களைச் செய்த (என்) பக்தர்களின் மங்களகரமான கூட்டங்களை அடைவான்.

72வது ச்லோகத்தில், பகவான் அர்ஜுனனிடம் இந்த சாஸ்த்ரத்தைக் கேட்ட பின் அவனுடைய அறிவின்மையால் ஏற்பட்ட மயக்கங்கள் அனைத்தும் தீர்ந்தனவா என்று கேட்கிறான்.

ச்லோகம் 73

அர்ஜுன உவாச ।
நஷ்டோ மோஹ꞉ ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ன்மயாச்யுத ।
ஸ்தி²தோ(அ)ஸ்மி க³தஸந்தே³ஹ꞉ கரிஷ்யே வசனம் தவ ॥

அர்ஜுனன் கூறுகிறான் – அச்யுதா! உன் அருளால் (என்) முரண்பட்ட அறிவு அழிந்தது; உண்மையான அறிவு என்னால் பெறப்பட்டது; ஸந்தேஹங்களில் இருந்து விடுபட்டு, உண்மையை உணர்ந்து உறுதியாக நிற்கிறேன்; (போரில் போரிட) உன் அறிவுரைகளின்படி செயல்படுவேன்.

74வது ச்லோகத்தில், “க்ருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த இந்த அற்புதமான உரையாடலை நான் கேட்டேன்” என்று ஸஞ்சயன் ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தை முடிக்கத் தொடங்குகிறான்.

75வது ஸ்லோகத்தில், இந்த உரையாடலை வ்யாஸ முனிவரின் அருளால் மிக அற்புதமான க்ருஷ்ணனிடமிருந்து நேரடியாகக் கேட்டதாகக் கூறுகிறான்.

76 மற்றும் 77வது ச்லோகங்களில், அவன் த்ருதராஷ்டிரனிடம் இந்த அற்புதமான உரையாடலைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு முறையும், க்ருஷ்ணனின் விஸ்வரூபத்தைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு முறையும் தான் ஆனந்தம் அடைவதாகக் கூறுகிறான்

ச்லோகம் 78

யத்ர யோகே³ஶ்வர꞉ க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ² த⁴னுர்த⁴ர꞉ ।
தத்ர ஶ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம ॥

எல்லாப் பெருமைகளையும் தன் அதீனத்தில் வைத்திருக்கும் க்ருஷ்ணன் இருக்கும் இடத்திலும், வில் ஏந்திய அர்ஜுனன் இருக்கும் இடத்திலும், எல்லாச் செல்வங்களும், வெற்றியும், புகழும், நற்பண்புகளும் நன்கு நிலைத்திருக்கும். இது என் கருத்து.

இவ்வாறு “ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்” என்னும் இத்தொடர் நிறைவடைகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org