ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 7 (விஜ்ஞான யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 6

கீதார்த்த ஸங்க்ரஹம் பதினொன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் ஏழாம் அத்யாயத்தின் கருத்தை, “ஏழாவது அத்தியாயத்தில் பரமபுருஷனின் உண்மையான இயல்பு, அதாவது, அவனே (பகவான்) உபாஸனைக்கு விஷயம், அந்த ஜீவாத்மாவின் மறைக்கப்பட்ட ஞானத்தையுடைய நிலை, (ஜீவாத்மாவுக்கு அந்த நிலையைக் போக்குவதற்காக) பகவானிடம் சரணடைதல், நான்கு வகை பக்தர்கள் பெருமை மற்றும் ஞானியின் பெருமை ஆகியவை பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச |
மய்யாஸக்தமனா꞉ பார்த்த² யோக³ம் யுஞ்ஜன்மதா³ஶ்ரய꞉ |
அஸம்ஶயம் ஸமக்³ரம் மாம் யதா² ஜ்ஞாஸ்யஸி தச்ச்²ருʼணு ||

பகவான் பேசினான்:
குந்தியின் மகனே! என்னிடத்தில் மனதை வைத்து, என்னையே நம்பி பக்தி யோகத்தைத் தொடங்கும் நீ, என்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய அந்த அறிவைப் பற்றி கவனமாகக் கேள்.

குறிப்பு: பகவான், உயர்ந்த பலனைப் பெற, கவனத்துடனும் உண்மையாகவும் கேட்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அத்தியாயத்தைத் தொடங்குகிறான். அடுத்த ச்லோகத்தில், அர்ஜுனன் க்ருஷ்ணனைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும், வேறு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று எடுத்துக் காட்டுகிறான்.

ச்லோகம் 3

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஶ்சித்³யததி ஸித்³த⁴யே |
யததாமபி ஸித்³தா⁴னாம் கஶ்சின்மாம் வேத்தி தத்த்வத꞉ ||

சாஸ்த்ரம் கற்கத் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவன் மட்டுமே முக்தி அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்கிறான். அவர்களில் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.

குறிப்பு: இந்த அறிவை அடைவது மிகவும் கடினம் என்று சொல்லி பகவான் இதைப் புகழ்கிறான்.

ச்லோகம் 4

பூ⁴மிராபோ(அ)னலோ வாயு꞉ க²ம் மனோ பு³த்³தி⁴ரேவ ச |
அஹங்கார இதீயம் மே பி⁴ன்னா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||

பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம், மனம், மஹான் மற்றும் (மூல ப்ரக்ருதியைக் குறிக்கும்) அஹங்காரம் ஆகிய எட்டு வகை வஸ்துக்களை உள்ளடக்கிய இந்த ப்ரக்ருதி, என்னுடையது.

குறிப்பு: முதலில் பகவான் அனைத்து அசித் தத்துவங்களையும் தனது உடைமையாக விளக்குகிறான்.

ச்லோகம் 5

அபரேயமிதஸ்த்வன்யாம் ப்ரக்ருʼதிம் வித்³தி⁴ மே பராம் |
ஜீவபூ⁴தாம் மஹாபா³ஹோ யயேத³ம் தா⁴ர்யதே ஜக³த் |

வலிமைமிக்க தோள்களை உடையவனே! இந்த அசேதனப் பொருள்கள் தாழ்ந்தது; ப்ராக்ருத இயல்பிலிருந்து வேறுபட்டதும் உயர்ந்ததுமான ஜீவாத்மா எனப்படும் திவ்யமான வஸ்து என்னுடையது என்பதை அறிந்து கொள்; இந்த ஜீவாத்மாக்களின் தொகுப்பால் இந்த ப்ரபஞ்சம் நிலைத்திருக்கிறது.

குறிப்பு: பகவான் ஜீவாத்மாக்கள் மூலம் அனைத்து அசித் பொருள்களையும் தாங்குகிறான். நாம் காணும் ஒவ்வொரு அசித் பொருளுக்குள்ளும் ஒரு ஜீவாத்மா வசிக்கிறான்; அந்த ஆத்மா பகவானை அந்தர்யாமியாகக் கொண்டிருக்கிறான். அடுத்த ச்லோகத்தில், பகவான் எல்லாவற்றுக்கும் தானே முதலும் முடிவும் என்று கூறுகிறான்.

7வது ச்லோகத்தில், “என்னை விட உயர்ந்தது எதுவுமில்லை; இந்த அனைத்துப் பொருட்களும் ஒரு நூலில் கட்டப்பட்ட மணிகளைப் போல என்னுடன் கட்டப்பட்டுள்ளன” என்று கூறுகிறான்.

8 வது ச்லோகம் முதல் 12 வது ச்லோகம் வரை, பல்வேறு வகையான வஸ்துக்களில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களையும் கட்டுப்படுத்துபவன் தானே என்று விளக்குகிறான். அவன் அப்படி ஒவ்வொரு பதார்த்தங்களைத் தானாகச் சொல்லிக்கொண்டாலும் அவனே அவற்றுக் காரணம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்

13வது ச்லோகத்தில், இப்படி அவனே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருந்தாலும், (ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய) மூன்று குணங்களைக் கொண்டதால் குழப்பமடைந்து, இந்த உலக மக்கள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று விளக்குகிறான்.

ச்லோகம் 14

தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா |
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||

மூன்று குணங்களால் (ஸத்வ, ரஜஸ், தமஸ்) நிரம்பியிருக்கும் இந்த ப்ரக்ருதி மண்டலம், தேவனான என்னால் உருவாக்கப்பட்டதால் (எந்தவொரு தனிமனிதனின் முயற்சியாலும்) கடப்பது கடினம். என்னிடம் மட்டும் சரணடைபவர்கள், இந்த உலகத்தை [என் அருளால்] கடந்து விடுவார்கள்.

குறிப்பு: இந்த ச்லோகத்தில் சரணாகதியின் மகத்துவத்தை பகவான் விளக்குகிறான்.

ச்லோகம் 15

ந மாம் து³ஷ்க்ருதினோ மூடா⁴꞉ ப்ரபத்³யந்தே நராத⁴மா꞉ |
மாயயாபஹ்ருதஜ்ஞானா ஆஸுரம் பா⁴வமாஶ்ரிதா꞉ ||

முட்டாள்கள், மனிதர்களில் மிகத் தாழ்ந்தவர்கள், மாயையால் அழிக்கப்பட்ட அறிவை உடையவர்கள் மற்றும் அஸுர குணம் கொண்டவர்கள் நான்கு வகையான பாவிகள் (வரிசைக்ரமத்தில் முந்தைய பாவிகளை விட அடுத்தடுத்தவர்கள் பெரியபாவிகள்) என்னிடத்தில் சரணடையாதவர்கள்.

குறிப்பு: எம்பெருமானிடத்தில் விரோதம் பாராட்டும் நான்கு வகையான நபர்கள் இங்கே காட்டப்படுகிறார்கள்.

ச்லோகம் 16

சதுர்விதா⁴ ப⁴ஜந்தே மாம் ஜனா꞉ ஸுக்ருதினோ(அ)ர்ஜுன |
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தா²ர்த்தீ² ஜ்ஞானீ ச ப⁴ரதர்ஷப⁴ ||

பரதனின் வழித்தோன்றல்களில் சிறந்தவனே! (செல்வமிழந்து)துக்கத்தில் இருப்பவன், (புதிய) செல்வத்தை விரும்புபவன், ஆத்மாவை அனுபவிக்க விரும்புபவன், மெய்யான அறிவை உடையவன் என நான்கு வகையான நற்குணமுள்ளவர்கள் என்னை வணங்குகிறார்கள்.

குறிப்பு: பகவானிடத்தில் அன்புள்ள நான்கு வகையான நபர்கள் இங்கே காட்டப்படுகிறார்கள்.

ச்லோகம் 17

தேஷாம் ஜ்ஞானீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஶிஷ்யதே |
ப்ரியோ ஹி ஜ்ஞானினோ(அ)த்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய꞉ ||

இந்த நால்வரில் எப்பொழுதும் என்னுடன் சேர்ந்திருந்தும் என்னிடம் ப்ரத்யேக பக்தியுடனும் இருக்கும் ஞானி சிறந்தவன். அத்தகைய ஞானிக்கு, நான் மிகவும் ப்ரியமானவன், அவனும் எனக்கு ப்ரியமானவன்.

குறிப்பு: ஞானியின் (சிறந்த பக்தி கொண்ட பக்தன்) மகத்துவம் இங்கே காட்டக்கப்படுகிறது.

ச்லோகம் 18

உதா³ரா꞉ ஸர்வ ஏவைதே ஜ்ஞானீ த்வாத்மைவ மே மதம் |
ஆஸ்தி²த꞉ ஸ ஹி யுக்தாத்மா மாமேவானுத்தமாம் க³திம் ||

இவர்கள் அனைவரும் வள்ளல்கள், ஆனால் ஞானியோ என்னைத் தாங்குப்வன் – இது எனது கொள்கை. அவனே என்னுடனே இருக்க விரும்பி, என்னையே உயர்ந்த குறிக்கோளாகக் கொள்பவன் அல்லவா?

குறிப்பு: ஞானியின் தனித்துவமான மகத்துவம் இங்கே அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

ச்லோகம் 19

ப³ஹூனாம் ஜன்மநாமந்தே ஜ்ஞானவான்மாம் ப்ரபத்³யதே |
வாஸுதே³வ꞉ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴꞉ ||

பல நல்ல பிறப்புகளுக்குப் பிறகு, ஞானியின் அறிவு முதிர்ந்து “வாஸுதேவனே எனது பரம ப்ராப்யம் (உயர்ந்த குறிக்கோள்), ப்ராபகம் (வழி), தாரக (என்னைத் தாங்குபவன்), போஷக (என்னை வளர்ப்பவன்), போக்யம் (எனக்கு இன்பம் தருபவன்)” என்று நினைத்து ஞானி என்னிடம் சரணடைகிறான். அவன் பெரிய உள்ளம் கொண்டவன். அப்படிப்பட்டவனை (இந்த உலகில்) பெறுவது கடினம்.

குறிப்பு: பகவானே வழியாகவும், குறிக்கோளாகவும் இருப்பது இங்கு காட்டப்படுகிறது.

அடுத்த பல ச்லோகங்களில், இந்த உலகில் ஒரு ஞானியைப் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை எடுத்துக்காட்ட பகவான் மற்ற தேவதைகளை வணங்குபவர்களின் இயல்புகளை விளக்குகிறான்.

ச்லோகம் 21

யோ யோ யாம் யாம் தனும் ப⁴க்த꞉ ஶ்ரத்³த⁴யார்ச்சிதுமிச்ச²தி |
தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||

எந்த தேவதைகளின் பக்தர்கள், எனக்குச் சரீரமாய் இருக்கும் எந்த தேவதையை உண்மையாக வணங்க விரும்புகிறார்களோ, அந்த தேவதையின் மீது மட்டுமே இருக்கும் அசைக்க முடியாத பக்தியை அவர்களுக்கு நான் அளிக்கிறேன்.

ச்லோகம் 23

அந்தவத்து ப²லம் தேஷாம் தத்³ப⁴வத்யல்பமேத⁴ஸாம் |
தே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||

அந்தக் குறைந்த அறிவுடையவர்களின் வழிபாட்டின் பலன் அற்பமானது மற்றும் ஒரு முடிவைக் கொண்டுள்ளது; ஏனென்றால், மற்ற தேவதைகளை வழிபடுபவர்கள் அந்தத் தேவதைகளை அடைகிறார்கள். ஆனால் என் பக்தர்களோ என்னை அடைகிறார்கள்.

28 வது ச்லோகத்தில், புண்ணியச் செயல்களால் பாவங்கள் குறைக்கப்பட்டவர்கள், பகவானை வழிபடத் தொடங்குவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

29வது ச்லோகத்தில், மோட்சத்தை அடைய விரும்புபவர்கள், ப்ரஹ்மம், அத்யாத்மம், கர்மம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

ச்லோகம் 30

ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³꞉ |
ப்ரயாணகாலே(அ)பி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ꞉ ||

ஐச்வர்யார்த்திகள் (இவ்வுலகச் செல்வத்தை விரும்புபவர்கள்) என்னை ஆதி பூத மற்றும் ஆதி தெய்வ குணங்கள் கொண்டவனாக அறிய வேண்டும் [இவை 8வது அத்யாயத்தில் விளக்கப்பட்டுள்ளன]; கைவல்யார்த்திகள் (ஆத்மாவையே அனுபவிக்க விரும்புபவர்கள்) மற்றும் பகவத் கைங்கர்யார்த்திகள் (பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்புபவர்கள்) ஆகிய இருவரைப் போல, ஐச்வர்யார்த்திகளும் (என்னை) ஆதி யக்யத்தைக் குணமாக உடையவனாக அறிய வேண்டும்; இந்த மூன்று வகையான மக்கள் (தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக என்னில் ஈடுபட்டுள்ளவர்கள், தாங்கள் விரும்பிய இலக்கை அடைய) தங்கள் உடல்களைத் துறக்கும்போது என்னை நினைவில் கொள்ள வேண்டும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org