ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆளவந்தார் தம்முடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஐந்தாம் ச்லோகத்தில் முதல் அத்யாயத்தின் கருத்தை “தகாத உறவினர்களிடத்தில் பாசத்தினாலும் கருணையினாலும் செய்ய வேண்டிய தர்மமான யுத்தத்தில் செய்யக்கூடாது என்கிற அதர்மபுத்தியைப் பெற்று, அதனால் அர்ஜுனன் கலங்கி நின்றான். அவனை யுத்தம் செய்ய வைப்பதற்காக இந்த கீதா சாஸ்த்ரம் எம்பெருமானாலே தொடங்கப்பட்டது” என்று அருளிச்செய்கிறார்.
ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இரண்டு தன்மைகளை உடையவன் – தோஷங்களுக்கு எதிர்த்தட்டாகவும், நற்குணங்களுக்கு இருப்பிடமாகவும் விளங்குகிறான். இரண்டு உலகங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவன் – அதாவது நித்ய விபூதி என்கிற பரமபதம் மற்றும் லீலா விபூதி என்கிற ஸம்ஸாரம். நாராயணன், புருஷோத்தமன், பரப்ரஹ்மம் என்றெல்லாம் அழைக்கப்படுபவன். இவ்வுலகில் கட்டுப்பட்டிருக்கும் பத்த ஜீவாத்மாக்களை ரக்ஷிப்பதற்காக தானே தன் சோதிவாய் மலர்ந்து இந்த கீதா சாஸ்த்ரத்தை அருளிச்செய்தான். இந்த சாஸ்த்ரத்தை அவன் அருளியவிதம் மிக ஆச்சர்யமானது.
பாண்டவர்களுக்கும் துர்யோதனாதிகளுக்கும் யுத்தம் நிகழும் சூழ்நிலையை முதலில் தானே தூது போய் ஏற்படுத்துகிறான். அர்ஜுனனுக்குத் தானே ஸாரதியாக (தேரோட்டியாக) இருக்கிறான். அதற்குப் பிறகு, யுத்தகளத்தில் அனைத்து ஸேனைகளும் கூடியிருந்த ஸமயத்தில், போர் புரிவதில் உறுதியாக இருந்த அர்ஜுனன் ஆணைப்படித் தேரைக் கொண்டு போய் இரண்டு ஸேனைகளுக்கும் நடுவில் நிறுத்துகிறான். அங்கே கூடியுருக்கும் பீஷ்மர், த்ரோணர் போன்றவர்களைக் கண்ட அர்ஜுனன் கலங்கத் தொடங்குகிறான். யுத்தம் செய்ய வேண்டுமா என்னும் அளவுக்குக் கலக்கத்தை அடைந்து, யுத்தத்தினால் நேரும் தீங்குகளைச் சொல்லி யுத்தம் வேண்டாம் என்று எம்பெருமானிடத்தில் வழக்காடுகிறான்.
இவற்றை எல்லாம், சிறந்த க்ருஷ்ண பக்தனான ஸஞ்சயன் தன்னுடைய குருவான வ்யாஸரின் அருளினால், த்ருதராஷ்ட்ரனுக்குத் தன்னுடைய ஞானக் கண்ணால் நேரில் காண்பதைப் போலக் கண்டு, ஒவ்வொரு விஷயமாக விளக்குகிறான்.
இவையெல்லாம் ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்தில் முதல் அத்யாயத்தில் உள்ள விஷயங்கள்.
முக்ய ச்லோகங்கள்
ச்லோகம் 1
த்⁴ருதராஷ்ட்ர உவாச ।
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: ।
மாமகா: பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥
“ஸஞ்ஜயனே! புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில் போர் புரியும் ஆசையுடன் ஒரு குழுவாகத் திரண்டிருக்கும் என் பிள்ளைகளும் பாண்டுவின் புத்ரர்களும் என்ன செய்தார்கள்?” என்று த்4ருதராஷ்ட்ரன் கேட்டான்.
குறிப்பு: தன் பிள்ளைகள் என்றும் பாண்டுவின் பிள்ளைகள் என்றும் பிரித்துக் கேட்பதால், த்ருதராஷ்ட்ரனின் ஓர வஞ்சனை தெரிகிறது.
ச்லோகம் 19
ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத் ।
நப⁴ஶ்ச ப்ருதி²வீம் சைவ துமுலோ’ப்⁴யநுநாத³யந் ॥
சங்குகள் சேர்ந்து ஊதப்பட்டதால் எழுந்த ஓசை ஆகாசத்தையும் பூமியையும் நிறைத்து, த்ருதராஷ்ட்ரனின் பிள்ளைகளின் நெஞ்சை உளுத்துப்போகும்படி பண்ணியது.
குறிப்பு: இங்கேயே, கண்ணன் எம்பெருமானின் சங்கின் ஓசை துர்யோதனன் முதலியவர்களின் தோல்வியையும் அழிவையும் உறுதி செய்தது.
ச்லோகம் 21
ஹ்ருஷீகேஶம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே ।
அர்ஜுந உவாச ।
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மே’ச்யுத ॥
(ஸஞ்சயன் சொன்னான்) இவ்வுலகுக்கு ராஜாவான த்ருதராஷ்ட்ரா! அர்ஜுனன் கண்ணனை நோக்கி இவ்வாறு பேசினான் “அச்சுதனே! என்னுடைய் தேரை இரண்டு ஸேனைகளுக்கும் நடுவில் கொண்டுபோய் நிறுத்து”
குறிப்பு: இவ்வாறு கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது அவனுடைய ஆச்ரித பாரதந்த்ர்யத்தை (அடியார்கள் சொற்படி நடப்பது) வெளியிடுகிறது.
ச்லோகம் 28
க்ருʼபயா பரயாவிஷ்டோ விஷீத³ந்நித³மப்³ரவீத் ।
அர்ஜுந உவாச ।
த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ॥
கருணையால் சூழப்படவனும் துக்கத்தைப் பெற்றவனுமான அர்ஜுனன் இவ்வாறு பேசினான் “க்ருஷ்ணா! என் மக்களே எனக்கு எதிரில் என்னுடன் போர் புரிய நிற்பதைக் கண்டு …”
ச்லோகம் 29
ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஶுஷ்யதி ।
வேபது²ஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே ॥
என்னுடைய கை மற்றும் கால்கள் தளர்ந்து விட்டன; என் வாய் உலர்ந்து விட்டது; என் உடம்பு நடுங்குகிறது; எனக்கு மயிர்கூச்செறிகிறது …
ச்லோகம் 30
கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே ।
ந ச ஶக்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந: ||
என்னுடைய வில்லான காண்டீவம் என் கைகளில் இருந்து நழுகின்றது; என் தோல் முழுக்க எரிகிறது; நான் ஸ்திரமாக நிற்பதற்கு என்னிடத்தில் பலம் இல்லை; என் மனம் கலங்குகிறது.
குறிப்பு: இந்த மூன்று ச்லோகங்களில் அர்ஜுனன் தன் உறவினர்கள், குருக்கள் முதலியவர்களைப் பார்த்தவுடன், தன்னுடைய மனமும் உடம்பும் தளர்வதையும் அவர்களை நோக்கி தன்னுடைய மனதில் கருணை பொங்குவதையும் கூறினான்.
இதற்கு மேல் உள்ள பல ச்லோகங்களில் அர்ஜுனன் தனக்குத் தன்னுடைய உறவினர்களையும் குருக்களையும் கொன்று இந்த ராஜ்யத்தைப் பெறுவதில் விருப்பம் இல்லை என்றான். மேலும் போர்கள் மூலம் நல்ல தலைவர்கள் இல்லாமல் போவதால், பழைய க்ரமங்கள் அழிவதையும் வர்ணக் கலப்பு ஏற்படுவதையும் கூறினான். மேலும் தான் இப்படிப்பட்ட அதர்ம யுத்தத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் தான் கொல்லப்படுவதை விரும்புவதாகக் கூறினான்.
ச்லோகம் 47
ஸஞ்ஜய உவாச ।
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஶத் ।
விஸ்ருஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்³நமாநஸ: ॥
இவ்வாறு சொன்ன அர்ஜுனன், துக்கம் அடைந்த மனதோடு, தன்னுடைய அம்புகள் மற்றும் வில்லைக் கீழே போட்டு, யுத்த களத்தில் இருந்த தன் தேரில் அமர்ந்தான். இவ்வாறு ஸஞ்சயன் த்ருதராஷ்ட்ரனுக்குச் சொன்னான்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org