ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் பூமிபாரத்தை நீக்குவதற்காகக் கண்ணனாக அவதரித்தான். பூமிபாரத்தை நீக்க அவன் செய்த செயல்களில் முக்கியமான ஒன்று மஹாபாரத யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தைத் தானே முன்னின்று ஏற்பாடு செய்து, சேனைகளின் வ்யூஹங்களை அமைத்து, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து, அவனுக்கு ஒவ்வொரு ஸமயத்திலும் தக்க உதவிகளைப் பண்ணி அவனை ரக்ஷித்து, ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதமிட்டும் ஆயுதம் எடுத்து, பகலை இரவாக்கி, எதிரிகளின் உயிர் நிலைகளைக் காட்டிக் கொடுத்து, இப்படிப் பலவிதத்தில் எம்பெருமானே இந்த யுத்தத்தைச் செய்து முடித்தான். இதற்கு ஒரு வ்யாஜமாகவே (பெயருக்கு ஒரு காரணமாக) அர்ஜுனனைக் கொண்டான். அதிலும் அர்ஜுனன் முதலில் யுத்தம் பண்ணமாட்டேன் என்று பின்வாங்கினபோது, அவனுக்கு கீதோபதேசத்தைச் செய்தான்.
எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் இந்த கீதா சாஸ்த்ரத்தில் கர்ம ஞான பக்தி யோகங்களால் அடையப்படுபவனாக காட்டப்பட்டுள்ளான் என்று ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரஹத்தின் ஆரம்பத்தில் அருளிச்செய்துள்ளார்.
இதில் 18 அத்யாயங்கள், 700 ச்லோகங்கள் அமைந்திருக்கின்றன. 18 அத்யாயங்களை மூன்று ஷட்கங்களாக (ஒரு ஷட்கம் – ஆறு அத்யாயங்கள்) ஆளவந்தார் முதலான பெரியோர்கள் பிரித்துக் காட்டுவர்.
ஆளவந்தார் தன்னுடைய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் ஒவ்வொரு ஷட்கத்திலும் காட்டப்படும் அர்த்தங்களைச் சுருக்கமாகக் காட்டியுள்ளார். அவையாவன
- முதல் ஷட்கத்தில் ஆத்மாவுக்கும் தேஹத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, கர்ம யோகம் மற்றும் ஞான யோகத்தால், யோகம் கைவருவதும் ஆத்மானுபவம் கிடைப்பதும் விதிக்கப் பட்டுள்ளன.
- இரண்டாம் ஷட்கத்தில் பரதத்வமான எம்பெருமான் விஷயத்தில் உண்மையான அனுபவம் ஏற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள ஞானத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே ஏற்படும் பக்தி யோகம் விளக்கப்பட்டுள்ளது.
- மூன்றாம் ஷட்கத்தில் ஸூக்ஷ்மமான (கண்ணுக்குத் தெரியாத) மூல ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா, ஸ்தூலமான (கண்ணுக்குத் தெரியும்) அசேதனப் பொருட்கள், இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸர்வேச்வரனான எம்பெருமான், கர்ம ஞான பக்தி யோகங்கள், இவற்றை அடையும் முறைகள் ஆகியவற்றில் முன் அத்யாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை, விளக்கப்பட்டுள்ளன.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://githa.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org