ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 14 (குணத்ரய விபாக யோகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ பகவத் கீதை ஸாரம்

<< அத்யாயம் 13

கீதார்த்த ஸங்க்ரஹம் பதினெட்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினான்காம் அத்யாயத்தின் கருத்தை, “பதினான்காம் அத்யாயத்தில், ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்கள் இந்த ஸம்ஸாரத்தில் எவ்வாறு பிணைக்கின்றன, அத்தகைய குணங்களின் தன்மைகள் செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது, அத்தகைய குணங்களை அகற்றும் முறை மற்றும் பகவானே மூன்று வகையான பலன்களையும் (இவ்வுலகச் செல்வம், ஆத்மானுபவம், பகவானை அடைவது) கொடுப்பது ஆகியவை பேசப்படுகின்றன” என்று காட்டுகிறார்.

முக்கிய ச்லோகங்கள்

ச்லோகம் 1

ஶ்ரீப⁴க³வானுவாச ।
பரம் பூ⁴ய꞉ ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞானானாம் ஜ்ஞானமுத்தமம் ।
யஜ்ஜ்ஞாத்வா முனய꞉ ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா꞉ ॥

முன்பு சொன்னதில் இருந்து வேறுபட்டதான, (ப்ரக்ருதி மற்றும் புருஷனைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையான) ஞானத்தில் சிறந்ததை நான் மீண்டும் விளக்குகிறேன்; அத்தகைய ஞானத்தை அடைந்து, அதை த்யானிப்பவர்கள் அனைவரும், இந்த ஸம்ஸாரத்திலிருந்து கொண்டே, பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தின் சிறந்த உணர்வை அடைவார்கள்.

ச்லோகம் 2

இத³ம் ஜ்ஞானமுபாஶ்ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா꞉ ।
ஸர்கே³(அ)பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச ॥

(இங்கே விளக்கப்பட இருக்கும்) இந்த ஞானத்தை அடைந்தவர்கள், என்னுடன் ஸாம்யத்தை அடைந்திருப்பார்கள், மேலும் இங்கு படைக்கப்படவும் அழிக்கப்படவும் மாட்டார்கள்.

3வது மற்றும் 4வது ச்லோகத்தில், விதம் விதமான படைப்புக்கு வழிவகுத்த ஆத்மா மற்றும் ப்ரகிருதியின் சேர்க்கை, தன்னாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது என்று பகவான் கூறுகிறான்.

ச்லோகம் 5

ஸத்வம் ரஜஸ்தம இதி கு³ணா꞉ ப்ரக்ருதிஸம்ப⁴வா꞉ ।
நிப³த்⁴னந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹினமவ்யயம் ॥

வலிமைமிக்க தோள்களையுடைய அர்ஜுனா! ப்ரக்ருதியுடன் சேர்ந்தே இருக்கும் ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களும் ஆத்மாவை உடலில் கட்டிவைக்கின்றன. ஆத்மாவுக்கு இந்த மூன்று குணங்காளோடே கூடியிருப்பதும், இந்த பௌதிக உடலில் இருப்பதுமாகிய தாழ்ச்சிகள் இயற்கையாகக் கிடையாது.

குறிப்பு: இந்த ச்லோகம் தொடங்கி, பகவான் மூன்று குணங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி விரிவாகப் பேசுகிறான்.

ச்லோகம் 6

தத்ர ஸத்வம் நிர்மலத்வாத்ப்ரகாஶகமநாமயம் ।
ஸுக²ஸங்கே³ன ப³த்⁴னாதி ஜ்ஞானஸங்கே³ன சானக⁴ ॥

குற்றமற்ற அர்ஜுனா! ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று குணங்களில், ஸத்வம் (ஆத்மாவின் ஞானத்தையும் ஆனந்தத்தையும்) மறைக்காமல் இயற்கையாகவே வெளிப்படுவதால், அது உண்மையான ஞானத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் அளிக்கிறது. இது ஆனந்தம் மற்றும் ஞானத்தின் மீது பற்றுதலை ஏற்படுத்துவதன் மூலம் (உடலில் இருக்கும் ஆத்மாவை) மேலும் பிணைக்கிறது.

ச்லோகம் 7

ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் ।
தந்நிப³த்⁴னாதி கௌந்தேய கர்மஸங்கே³ன தே³ஹினம் ॥

குந்தி மகனே! ரஜோ குணமே (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும்) ஆசைக்கும், சப்தம், ஸ்பர்சம் முதலியவற்றின் அடிப்படையிலான உலக இன்பங்களுக்கும் மற்றும் குழந்தைகள்/நண்பர்கள் மீதான பற்றுதலுக்கும் காரணம் என்பதை அறிந்து கொள்; அந்த ரஜோ குணம் இவ்வுலகச் செயல்களில் ஆசையை உண்டாக்கி ஆத்மாவை உடலில் பிணைக்கிறது.

ச்லோகம் 8

தமஸ்த்வஜ்ஞானஜம் வித்³தி⁴ மோஹனம் ஸர்வதே³ஹினாம் ।
ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴னாதி பா⁴ரத ॥

பரத குலத்தில் உதித்தவனே! தமோ குணமோ என்னில் வஸ்துக்களின் தன்மையைத் தவறாகப் புரிந்துகொள்வதால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்; உடலை உடைய அனைத்து ஆத்மாக்களுக்கும், அது தர்மத்துக்கு முரணான அறிவை ஏற்படுத்துகிறது; இது கவனக்குறைவு, சோம்பல் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆத்மாவை பிணைக்கிறது.

குறிப்பு: இந்த 3 ச்லோகங்களில், மூன்று குணங்களின் விளைவுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

9வது ச்லோகத்தில், ஒவ்வொரு குணத்தின் முக்கிய அம்சம் விளக்கப்பட்டுள்ளது.

10வது ச்லோகத்தில், ஒவ்வொரு குணமும் வெவ்வேறு நேரங்களில் எவ்வாறு மேலோங்குகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது

11 முதல் 13வது ச்லோகங்களில், விளைவுகளிலிருந்து ஒவ்வொரு குணத்தின் ஆதிக்கத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

14 மற்றும் 15 வது ச்லோகங்களில், மூன்று குணங்கள் ஒவ்வொன்றும் பிரதானமாக இருக்கும்போது உடலை விட்டு வெளியேறும் விளைவு, அந்த குணத்துடன் பொருந்திய பிறவியைப் பெறுவதாக விளக்கப்பட்டுள்ளது.

16வது ச்லோகத்தில், அத்தகைய பிறவிகளை அடைந்தவர்கள், அத்தகைய குணத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

17 மற்றும் 18வது ச்லோகங்களில், ஒரு நபரின் இத்தகைய குணங்களின் விளைவுகள் விளக்கப்பட்டுள்ளன.

ச்லோகம் 19

நான்யம் கு³ணேப்⁴ய꞉ கர்தாரம் யதா³ த்³ரஷ்டானுபஶ்யதி ।
கு³ணேப்⁴யஶ்ச பரம் வேத்தி மத்³பா⁴வம் ஸோ(அ)தி⁴க³ச்ச²தி ॥

ஸத்வ குணத்தில் நிலைபெற்று, ஆத்மாவை உணர்ந்த ஒருவன், ஸத்வம் முதலிய குணங்களிலிருந்து வேறுபட்ட ஆத்மாவை கர்த்தாவாகக் கருதாமல், (செயல்களுக்குக் காரணமான) குணங்களை ஆத்மாவிலிருந்து வேறுபட்டதாகக் கருதும்போது, அவன் என் நிலையை அடைகிறான்.

20வது ச்லோகத்தில், அவன் தனது நிலையை அடைவது என்பது எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, பரிசுத்தமான ஆத்மாவை அனுபவிப்பதாகும் என்று விளக்குகிறான்.

21வது ச்லோகத்தில், அர்ஜுனன் மூன்று குணங்களைக் கடந்த ஒருவனின் இயல்பைப் பற்றி வினவுகிறான்.

22வது ச்லோகத்தில், மூன்று குணங்களைக் கடந்தவன், விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத விஷயங்களை விரும்பவோ வெறுக்கவோ மாட்டான் என்று பகவான் விளக்குகிறான்.

23வது ச்லோகத்தில், அத்தகைய நபர் அத்தகைய சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து, அந்த குணங்களால் தூண்டப்பட்ட எந்தச் செயலும் புரிய மாட்டான் என்று மேலும் விளக்குகிறான்.

24 மற்றும் 25வது ச்லோகங்களில், மூன்று குணங்களைக் கடந்தவன் களிமண், கல் மற்றும் தங்கத்தை ஒரே மாதிரியாகக் கருதுவான், ஆத்மாவும் உடலும் வேறுபட்டது என்பதை அறிவான், தன்னைப் பற்றிய புகழ்ச்சியையும் அவமதிப்பையும் ஒன்றாகக் கருதுவான், நண்பனையும் எதிரியையும் ஒன்றாகக் கருதுவான். மேலும் ஆத்மாவுக்கு உடலுடன் ஏற்படும் பிணைப்புக்கு வழிவகுக்கும் அனைத்து முயற்சிகளையும் கைவிடுவான்.

ச்லோகம் 26

மாம் ச யோ(அ)வ்யபி⁴சாரேண ப⁴க்தியோகே³ன ஸேவதே ।
ஸ கு³ணான்ஸமதீத்யைதான் ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே ॥

மற்ற தெய்வங்கள் மற்றும் பலன்களில் கவனம் செலுத்தாத பக்தி யோகத்தால் (அதன் அங்கங்களுடன்) என்னை வணங்குபவன், இந்த மூன்று குணங்களையும் கடந்து, ப்ரஹ்மத்திற்கு இணையானவனாக இருக்கத் தகுதி பெறுகிறான்.

ச்லோகம் 27

ப்³ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச ।
ஶாஶ்வதஸ்ய ச த⁴ர்மஸ்ய ஸுக²ஸ்யைகாந்திகஸ்ய ச ॥-

ஏனென்றால், நான் அழியாதவனாகவும் ஆத்மஞானத்தைப் பெறுவதற்கான அழியாத வழியாகவும் இருக்கிறேன்; மேலும், உயர்ந்த செல்வத்தைக் கொடுக்கும் ஸநாதன தர்மமான பக்தி யோகத்துக்கு, நானே வழியாக இருக்கிறேன். மேலும், ஞானியானவன் அடையும் பேரின்பத்துக்கான வழியும் நானே.

குறிப்பு: ஐச்வர்யம் (உலகச் செல்வம்), கைவல்யம் (ஆத்மானுபவம்) மற்றும் பகவத் கைங்கர்யம் (பகவானுக்கு நித்ய சேவை) ஆகியவற்றுக்குத் தானே வழி என்று கூறி பகவான் முடிக்கிறான்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org