ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
இதிஹாஸங்களில் ஒன்றான மஹாபாரதத்தின் முக்கியமான பகுதி ஸ்ரீ பகவத் கீதை. பூமியானது தீயோர்களாலே மிகவும் பாரத்தை அடைந்து இருக்க, ஸ்ரீமந்நாராயணன் த்வாபர யுகத்தின் இறுதியில் கண்ணன் எம்பெருமானாக அவதரித்து, ஸ்ரீ கீதையில் தானே அருளிச்செய்தபடி நல்லோர்களை ரக்ஷித்து, தீயோர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டினான். உபநிஷத்துக்களின் ஸாரமாக இருப்பதானால் ஸ்ரீ கீதையானது கீதோபநிஷத் என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ கீதையின் பெருமைகளை பின்வரும் ச்லோகம் நன்றாக விளக்கும்:
ஸர்வோபநிஷதோ3 கா3வ: தோ3க்3தா4 கோ3பாலநந்த3ன: |
பார்த்தோ2 வத்ஸ: ஸுதீ4ர் போ4க்தா து3க்த4ம் கீ3தாம்ருதம் மஹத் ||
எல்லா உபநிஷத்துக்களும் பசுக்கள். கண்ணனே இப்பசுக்களைக் கறக்கும் இடையன். அர்ஜுனனே கன்றுக்குட்டி. ஸ்ரீ கீதையே மிகவும் இனிய பால். அறிவாளிகள் இப்பாலைப் பருகுபவர்கள்.
கண்ணன் எம்பெருமான் தன் சோதிவாய்த் திறந்து அருளிய கீதையை ஆழ்வார்கள் மிகவும் கொண்டாடியுள்ளார்கள். மனிதப் பிறவியை அடைந்த ஒவ்வொருவரும் ஸ்ரீ கீதையைத் தங்கள் உஜ்ஜீவனத்துக்காகக் கற்றறிய வேண்டும் என்று அறுதியிடுகின்றனர். மேலும் ஸ்ரீ கீதை, “ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||” (எல்லா உபாயங்களையும் விட்டு, என்னையே உபாயமாகப் பற்று; நான் உன்னுடைய எல்லாப் பாவங்களையும் போக்குகிறேன்; சோகப் படாதே) என்கிற க்ருஷ்ண சரம ச்லோகத்தை உட்கொண்டிருப்பதால், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்ச ஸம்ஸ்காரத்தின்போது ரஹஸ்ய த்ரய மந்த்ரோபதேசத்தில், இந்தச் சரம ச்லோகமும் இருக்கிறது. இது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமாக அறிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டுவது.
- நம்மாழ்வார் திருவாய்மொழி 4.8.6இல் “அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர் அறிய நெறியெல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி” (இவ்வுலகில் இருக்கும் அறிவில் குறைந்தவர்களாக இருப்பதை அறியாத மனிதர்களுக்கு. ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தங்களை மிகத் தெளிவாக அருளினான்) என்று அருளியுள்ளார்.
- திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 71இல் “சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஞானமில்” (அடைய முடியாதவனாகவும் எளிதில் அடையப்படுபவானாகவும், சிறு பிள்ளையாகவும் மிகப் பெரியவனாகவும், இடையனாக அவதரித்த எம்பெருமான், த்வாரகைக்குத் தலைவனாகவும் இருந்து கொண்டு, மஹாபாரத யுத்தத்தின்போது ஸ்ரீ கீதையை அருளிச்செய்தான். இவ்வுலகில் இருந்தும் கீதையைக் கற்றறியாதவர்கள் எம்பெருமானுக்கு எதிரிகளான அறிவிலிகள்) என்கிறார்.
நம் ஆசார்யர்களும் ஸ்ரீ கீதையைக் கற்று கொள்வதை அவச்யம் என்று சொல்லியுள்ளனர். எம்பெருமானார் ஸ்ரீ கீதைக்கு அழகான ஒரு வ்யாக்யானத்தை அருளியுள்ளார். வேதாந்தாசார்யர் அதை இன்னும் விரித்துரைத்து தாத்பர்ய சந்த்ரிகை என்ற க்ரந்தத்தை அருளியுள்ளார். பல ப்ரமாணங்களில் இருந்தும் மேற்கோள் காட்டி, ஸ்ரீ கீதையின் ஆழமான, உண்மை அர்த்தங்களை இந்த வ்யாக்யானங்கள் காட்டுகின்றன.
புத்தூர் ஸ்ரீ உ வே க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பூர்வர்கள் வ்யாக்யானங்களைக் கொண்டு ஒரு அழகான விரிவுரையை அளித்துள்ளார். இதில் ஒவ்வொரு ச்லோகத்துக்கும் பதபதார்த்தத்தையும் அருளியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு அத்யாயத்துக்கும் சுருக்கமான விளக்கத்தையும் முக்கியமான ச்லோகங்களுக்கு விளக்கத்தையும் அளிக்க ஒரு முயற்சி எடுக்கிறோம். இதில் உள்ள குற்றங்களை விட்டு, நன்மைகளை எடுத்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறோம்.
- விஷயச் சுருக்கம்
- அத்யாயம் 1
- அத்யாயம் 2
- அத்யாயம் 3
- அத்யாயம் 4
- அத்யாயம் 5
- அத்யாயம் 6
- அத்யாயம் 7
- அத்யாயம் 8
- அத்யாயம் 9
- அத்யாயம் 10
- அத்யாயம் 11
- அத்யாயம் 12
- அத்யாயம் 13
- அத்யாயம் 14
- அத்யாயம் 15
- அத்யாயம் 16
- அத்யாயம் 17
- அத்யாயம் 18
ஆதாரம் – http://githa.koyil.org/index.php/preface/
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org